'This proves DMK's intentions' - Vanathi Srinivasan interview Photograph: (bjp)
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் கூடியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், சட்டப்பேரவை மரபை சபாநாயகர் அப்பாவு எடுத்து கூறியபோது அதை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். கடந்த ஆண்டும் இதேபோல முரண்கள் ஏற்பட்டு ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். “மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்க வேண்டும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கோ அல்லது மாநில அரசு வழங்கப்பட்ட உரையை நீக்கம் செய்வதற்கோ அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. கடந்த 2023 ஜனவரி 10 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நான் இங்கே நினைவு கூற விரும்புகிறேன். 'ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை' என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும் அதை கலைஞர் வழிமொழிந்த போதிலும் அந்த பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை'' என்றார்.
தொடர்ந்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கடந்த முறை நடந்தது போலவே ஆளுநர் அவர்களிடமிருந்து வந்த கோரிக்கையான தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, ஆளுநர் வெளியேறியதற்கு பின்பாக லோக் பவனிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.
எந்தெந்த காரணங்களுக்காக ஆளுநர் அவர்கள் அந்த உரையை படிக்காமல் விட்டிருக்கிறேன் என்கின்ற விளக்கத்தையும் கொடுத்திருகிறார். அதற்குள் ரொம்ப அதிகமா போக வேண்டியது இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் ஆளுநர் இம்மாதிரி வெளியே செல்வார்; வெளியேறி செல்வார்; உரையைப் படிக்க மாட்டார்; தேசிய கீதத்தை நாம இசைக்க போவதில்லை என்ற முன்முடிவுகளோடு முதலமைச்சர் அவருடைய உரையை தயாரித்து வந்து படித்தார். அப்போது ஏற்கனவே மாநிலத்தினுடைய முதல்வர் ஆளுநர் நிச்சயமாக உரையை படிக்க விடக்கூடாது என்பதற்காகவே அதற்காக ஒரு பதிலைத் தயாரித்து வைத்திருந்தார்கள் என்றால் இவர்களுடைய எண்ணம் என்பது நிரூபணமாகிறது'' என்றார்.
Follow Us