பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது.

Advertisment

தொடர்ந்து முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. பீகாரில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருவதை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, ''பீகார் சட்டமன்றத் தேர்தலில், பீகார் மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர்'' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச்  சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி 208 இடங்களில் முன்னணி வகித்து மிகப்பெரிய வெற்றி பெற உள்ளது. இதிலிருந்து தெரிய வருவது உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்த உடனே திமுக, திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே எதிர்த்தன. அதற்கு காரணம் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வந்தது. பீகார் தேர்தலில் என்ன சதி இருக்கிறது. அவர்களுக்கு பின்னடைவு வந்தால் சதி என்பார்கள். ஜெயிச்சா நல்லா இருக்கு என்பார்கள். சென்னையில் மட்டும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இறந்தவர்கள், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிமாறியவர்கள், இரட்டை வாக்காளர்கள் என சுமார் 50,000 வாக்குகள் உள்ளனர்'' என்றார்.