தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  
Advertisment
இத்தகைய சூழலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 5 விசைப்படகுகளுடன் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை என்பது மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Advertisment
இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், '2025 ஆம் ஆண்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான். மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க துரிதமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அக்டோபர் 9 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடி படகுகள், 74  மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டது மீனவ சமூகத்தினர் இடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.