நாளை மறுநாள் (26.08.2025) தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
கடந்த 15.9.2022 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு காலை உணவினை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்றது.
இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90%க்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.08.2025 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'காலை உணவுத் திட்டத்தில், இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.