சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பற்றி எரிந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வந்த பொழுது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீயானது பல்வேறு பெட்டிகளுக்கு பரவியது. முன்னதாக உள்ளே இருக்கும் எரிபொருள் டீசலா அல்லது எண்ணெய்யா என்பது தெரியாத நிலையில் தற்போது சரக்கு ரயிலில் இருந்தது கச்சா எண்ணெய் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீப்பற்றி எரிந்து வருவதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ஒரு பெட்டியில் தீப்பிடித்த நிலையில் தற்போது தீயானது எட்டு பெட்டிகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எட்டு ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.
உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். இது சாதாரண தீ விபத்து அல்ல;டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.