சமீபமாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகமாக பிடிபட்டு வருகின்றன. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு நூதன முறையில் சிறிய சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. வாகனத்தின் பிளாட்பார்ம் பகுதி பார்ப்பதற்கு வினோதமாக இருந்தது. சந்தேகம் கொண்ட அதிகாரிகள் பிளாட்பார்ம் பகுதியை ஆய்வு செய்தபோது பிளாட்பார்ம் நகரும் வகையில் இருந்தது.
அதனைத் தூக்கிப் பார்க்கையில் உள்ளே பொட்டலம் பொட்டலமாக மிகவும் நேர்த்தியாக கஞ்சா அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் 360 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தட்ட வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாகனத்திற்கான நம்பர் பிளேட் மற்றும் பாஸ்ட் டேக் ஆகியவை போலி என்பது தெரியவந்தது. இதனைத் தயார் செய்து கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காக வாகனத்தின் பிளாட்பார்ம் பகுதியில் சிறிய அறை போல ஏற்படுத்தி அதில் கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைத்துவிட்டு அதன் மேல் தகடு ஒன்றை எம்டி பிளாட்பார்ம் போல வைத்து மறைத்து கஞ்சா கடத்தப்பட்டது அதிகாரிகளுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.