சென்னையில் நடைபெற்று வரும் 49வது புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், “இன்று புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன், பிடித்த புத்தகங்களை வாங்கியிருக்கிறோம். தமிழக அரசு நுழைவுக் கட்டணமில்லாமல் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமான கூட்டம் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளது. காலத்தால் அழியாத அறிவாயுதம் புத்தகம். நாம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த பிறகும் கூட புத்தகங்களால் கிடைக்கப் பெறும் அறிவு மட்டும் எப்போதும் நம்முடன் இருக்கும்.
புத்தகங்களை நாம் எழுத்தாகவோ அல்லது காகிதங்களாகவோ பார்ப்பதை விட அறிவாயுதமாக பார்க்க வேண்டும். இந்த புத்தகக் கண்காட்சி என்பது தமிழ் நாட்டில் எவ்வளவு அறிவாளிகள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. மேலும், இந்த புத்தகக் கண்காட்சியை உலகத்தரம் வாய்ந்த கண்காட்சியாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்று கூறியுள்ளார். மேலும், கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "அதிமுக கூட்டணியில் அமமுக சேர்ந்துள்ளது. இது இயற்கைக்கு மாறான கூட்டணி. தமிழ் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. இந்த கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அமமுகவின் தலைவர் தினகரன் நேற்று வரை, துரோகி என்று யாரை விமர்சித்து வந்தாரோ அவருடனே தற்போது கூட்டணி வைத்துள்ளார். அது எப்படி ஏற்புடையதாக இருக்கும். பொதுவாகவே, இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல நூறு முறை வந்தாலும் மக்கள் அவரையும், அந்த கூட்டணியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு 3 ஆயிரத்து 400 கோடி வரையிலான நிதியை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை. புதிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த பணத்தைத் தருவோம் என பாஜக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. அப்படியிருக்கும் நிலையில், பாஜகவால் எப்படி தமிழ் நாட்டில் வாக்கு கேட்க முடியும்? தமிழ்நாட்டு மக்கள் எப்படி அவர்களுக்கு வாக்களிப்பார்கள்?” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/selvaperunthagi-pm-bookfair-background-2026-01-21-17-14-35.jpg)