2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் கடந்த செப். 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகை சாய் பல்லவிக்கு அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா, பாடலாசிரியர் விவேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு இசையமைப்பாளர் அனிருத், நடிகர் மணிகண்டன், ஸ்வேதா மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசின் எம் எஸ் சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (11/10/2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கலைத்துறையின் எந்த பிரிவையும் விட்டு விடக்கூடாது என்று கவனத்தோடு இந்த விருதுகளை வழங்குகின்ற இயல் இசை நாடக மன்றத்திற்கு என்னுடைய மனதார சிறப்புக்குரிய பாராட்டுக்கள். இங்கு பெரும்பாலானோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான். பலருடைய கலைத் தொண்டு பற்றி எனக்கு தெரியும். மூத்த கலைஞர்கள் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் கொண்டு மிகச் சரியானவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
90 வயதான முத்து கண்ணம்மாளும் விருது பெறுகிறார் இளம் இசையமைப்பாளர் அனிரூத்தும் விருது பெறுகிறார். அந்த அளவிற்கு சிறப்பான விழா இந்த விழா. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும் விருது பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நாட்டில் தங்கத்தின் உடைய விலை என்னவென்று உங்களுக்கு தெரியும். ராக்கெட் வேகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த விருதை அறிவித்த அன்றைக்கு தங்கத்தின் விலை என்ன? இன்று தங்கத்தின் விலை என்ன என ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும். ஆனால் அவ்வளவு மதிப்புக்குரிய வகையில் அமைந்திருக்கிறது. தங்கத்தை விட கலைமாமணி என்ற புகழ் சேர்க்கும் பட்டத்திற்கு தான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகின்ற பட்டம்'' என்றார்.