'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஆன்லைனில் ஓட்டுப் போடுவது தவறு என்கிறோம். ஆன்லைனில் வாக்களிக்கும் உரிமை முதியவர்கள், அரசுப் பணியாளர்கள் இந்த இரண்டு பேருக்கும் தான் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பீகாரில் இருப்பவர்களுக்கெல்லாம் ஆன்லைனில் வாக்களிக்க வாய்ப்பு கொடுத்தால் அது தவறு.
ஆன்லைன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் தவறு நடக்கிறது என்று நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னுமே பல தவறுகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கிறது. அதில் இது ஒரு புது தலைவலி. கண்டிக்கக் கூடிய விஷயம். வட மாநிலத்தவர்கள் ரக்ஷா பந்தன், தீபாவளி என எல்லா விழாக்களுக்கும் ஊருக்கு போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். அதுபோல தேர்தல் நேரத்திலும் போய் வாக்களித்து விட்டு வரட்டும் யார் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆன்லைனில் எதற்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கிறார்கள். இதுதவறான முன்னுதாரணமாக மாறிவிடும். இதில் நிச்சயம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதியரசர்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகத் தான் உள்ளது. நிறைகளும் குறைகளும் கலந்த ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது'.
சட்ட ஒழுங்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆணவக் கொலை, லாக் அப் கொலை, டாஸ்மாக் போதையில் கொலை, கஞ்சாவில் கொலை, பாலியல் வன்கொடுமைகள், சங்கிலி பறிப்புகள் என சட்ட ஒழுங்கு கேள்விக் குறியாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும். விவசாயமும் நெசவுத் தொழிலும் படுபாதாளத்திற்குப் போய் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்'' என்றார்.