இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பாக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஐந்து சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து சிறப்பு ரயில்களும் தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து-செங்கோட்டை செல்வதற்காக சிறப்பு ரயில் நாளை இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று நாளை மறுநாள் பதினெட்டாம் தேதி மதுரை செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு ரயில்கள் எந்தெந்த பகுதிகளில் நின்று செல்லும் என்பது தொடர்பான விவரங்கள் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான கட்டணங்களே வசூலிக்கப்படும் என்றும், அதேபோல பண்டிகை முடிந்து மீண்டும் பொதுமக்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக மதுரையில் இருந்து தாம்பரம் மற்றும் எலும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.