'This camaraderie will eradicate and defeat fascism' - MK Stalin's speech Photograph: (dmk)
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''நமக்குள் இருக்கக்கூடிய நட்பு என்பது தேர்தல் அரசியலை கடந்த நட்பு. சாதியவாதம், வகுப்புவாதம் பெரும்பான்மைவாதம், எதேச்சாதிகாரம், மக்களை ஒடுக்கக்கூடிய அத்தனைக்கும் எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் ஓரணையில் என்று பணியாற்றனும்னு என் நோக்கத்தில் உருவான தோழமை நம்முடைய தோழமை.
நான் உறுதியாக சொல்கிறேன் இந்த தோழமைதான் பாசிசத்தை ஒழிக்கும், வீழ்த்தும். இந்த தோழமைதான் எதேச்சாதிகாரம் விழுத்தும். இந்த தோழமைதான் மதவாதத்தை வீழ்த்தும். இந்த தோழமைதான் சர்வாதிகாரத்தை விழுத்தும். நம்முடைய இந்த நோக்கங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் என்னென்னவோ கனவுகளை கண்டார்கள். இந்த ஒற்றுமையை சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எண்ணங்கள் தான் சிதைந்து போயிருக்கு. நம்முடைய இந்த தோழமை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏன்னென்றால் இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல எண்ணங்களுக்காக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி. நம்முடைய இந்திய நாட்டையும், தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்கிற அந்த உயர்ந்த எண்ணத்தை லட்சியமாக கொண்டு அமைந்திருக்கக் கூடிய கூட்டணி.
பாசிச பாஜக தன்னுடைய ஆக்டோபஸ் கொடுமையால் எல்லா பக்கமும் நீட்டி கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இந்திய நாடு இதுவரை காப்பாற்றி வைத்திருந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கிற செயலை ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கோட்பாடுகளை தங்களுக்கு ஏற்ற மாதிரி சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழிச்சு ஒற்றுமை தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள். பாஜக எவ்வளவு ஆபத்தானது எவ்வளவு குறுகிய சிந்தனை கொண்டது, எந்த அளவுக்கு பன்முகத் தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும் ஒரே நாடு என்றால் அதுல ஒரு மதம், ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரே ஒரு தலைமை தான் இருக்க வேண்டும்.
மாநிலங்களுடைய வளத்தை சூரையாடி ஒன்றியத்தில் குவிக்கிறார்கள்.மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். மதச்சார்பின்மை, சோசலிசம், சமநீதி, சமூகநீதி, பொதுவுடமை, பொது உரிமை உள்ளிட்ட அந்த சொற்களை கேட்டாலே பாஜகவிற்கு கசக்கிறது. இந்த சொற்களை எல்லாம் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல அதிகாரத்தில் இருந்தும் அழிக்க துடியாக துடிக்கிறார்கள். பறந்து விரிந்த நம்மோட இந்தியா இப்போ மிகப்பெரிய நெருக்கடிக்கும் ஆபத்துக்கும் ஆளாகி இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நினைத்த மாதிரி 400 இடங்கள் 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால் இப்போது இருப்பதை விட இன்னும் மோசமாகி இருக்கும்'' என்றார்.
Follow Us