சஞ்சார் சாத்தி என்பது மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் முயற்சியால் தொடங்கப்பட்ட செயலி ஆகும். இது தொலை தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், மொபைல் போன் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலம், ஒருவரது மொபைல் போன் திருடப்பட்டாலோ, காணாமல் போனாலோ எளிதில் கண்டுபிடித்து அவற்றை பயன்படுத்த முடியாமல் (block) தடுக்க உதவுகிறது. அதோடு அந்த மொபைல் போன்கள் மூலம் நடைபெறும், மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நிகழும் நிதி உள்ளிட்டபல்வேறு மோசடிகளை கட்டுப்படுத்தவும் இந்த செயலி உதவும் என கூறப்படுகிறது. 

Advertisment

மேலும் ஒருவரது பெயரில் உள்ள போலி சிம் கார்டுகள், தேவையற்ற சிம் கார்டுகளை முடக்கவும் இந்த செயலில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவி இருக்க வேண்டும் என்று மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் தொலை தொடர்பு  துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான புதிய ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி  நிறுவப்பட்டிருக்க வேண்டும்  என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

ஏற்கனவே கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் அப்டேட் செய்யும் போது இந்த செயலியை தானாகவே ஸ்மார்ட் போனில் நிறுவும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருபவர்கள் இந்த செயலியை ஆப்பிள் மற்றும் கூகிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.