திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (09.11.2025) அதிகாலை சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த கார் நாகப்பட்டினம் பைபாஸ் சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்து காரணமாக பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்து காரில் தீ பற்றியது. இதனால் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாகச் சாலையில் சென்றவர்கள் உடனடியாக இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே சிறிது நேரம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
மேலும் காரை ஓட்டி சென்ற ஓட்டுநர் முழுவதுமாக எரிந்து உடல் கருகிய நிலையில் காவல் துறையினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு காரை ஓட்டி வந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து கார் எரிந்ததில் ஒருவர் உடல் கருகிப் பலியான சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us