சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று திருவள்ளூர் அருகே வந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-07-25) அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீப்பற்றி எரிந்த நிலையில், தீயானது ரயிலின் 8 பெட்டிகளுக்கு மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 14 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால் 13 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர், தண்டவாளத்தில் ரயில் விழுந்த பெட்டிகளை ராட்சத கிரேன்கள் மூலம் இரவிலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இரண்டு நாட்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இன்று அங்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து கடம்பத்துார் ரயில் நிலையம் வரையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வருகின்ற மூன்று நாட்களுக்கு அந்த பகுதியில் செல்லும் ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்கப்பட வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்னழுத்த கம்பிகள் மற்றும் தண்டவாளங்களில் சோதனை ஓட்டமாக அந்த மார்க்கத்தில் வரும் ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.