Advertisment

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு; 3வது நீதிபதியின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

madurai-high-court-our

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய 2 வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பான விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாகத் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா தர்காவில் ஆடு மற்றும் கோழிகளைப் பலியிடக்கூடாது என்று பல்வேறு மனுக்களும், அதே போன்று அங்கு ஆடு மற்றும் கோழிகளைப் பலியிடுவதற்கு எந்த இடையூறுகளையும் அரசு செய்யக்கூடாது என பல்வேறு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது. 

Advertisment

அதன்படி இந்த வழக்கு விசாரணைக்குப் பின் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி (24.06.2025) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு மற்றும் கோழி ஆகியவற்றைப் பலியிடுவதற்குத் தடைவிதிக்கக் கோரிய மனுக்களை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதோடு இந்த விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

அதே சமயம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவிக்கப்பட்ட உத்தரவிற்கு முரண்படுவதாக நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்தார். இதனால் 2 நீதிபதிகளுக்கும் இடையே முரண்பட்ட தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் 3வது நீதிபதியாக விஜயகுமார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி விஜயகுமார் அமர்வில் இன்று (08.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆடு, கோழிகளைப் பலியிடத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், “2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே திருப்பரங்குன்ற மலை, திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்கப்படுகிறது. எனவே அது அவ்வாறு அழைக்கப்பட வேண்டும். 

தர்காவில் ஆடு, கோழி பலியிட்டதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற அவசியமான வழிபாட்டு முறை இருந்தாலே கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கூறுகையில், “இந்த விசாரணை என்பது திருப்பரங்குன்ற மலை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும். அங்கு ஆடு, கோழி பலியிடப்படலாமா? என்ற இரு கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்கப்படும்” எனக் கூறினார். அதோடு இந்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

madurai judgement madurai high court Thiruparankundram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe