மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘இந்தாண்டு கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் அல்லாமல் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்றத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாக மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை நீதிமன்றம் உறுதி செய்து ஒரு உத்தரவாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் ஒரு மனுதாரராக இணைத்து வழக்கை நேற்று (03.12.2025)தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். முன்னதாக இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம், அரசு தரப்பு என பல்வேறு தரப்பின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கார்த்திகை திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கான முழுமையான பாதுகாப்பை மதுரை மாநகர காவல்துறை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டடிருந்தார்
அதன்படி கார்த்திகை தீபத் திருநாளான நேற்று (03.12.2025) மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் கோயில் அருகில் கார்த்திகை தீபத்தை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், நீதிமன்ற உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்றவில்லை என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்து மலை மீறி ஏற முயற்சி செய்ததால் அங்கு இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/thiruparankundram-issue-2025-12-04-08-41-52.jpg)
அதேசமயம் தடுப்புகளை தூக்கி எறிந்த இந்து அமைப்பினர் ஏராளாமானோர் கூடி மலை மீது ஏற முயற்சி செய்து அங்கு போராட்டம் நடத்தி வந்ததால் பெரும் பதற்றமான சூழல் நிலவியதுகிறது. இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து அமைப்பினரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.அதோடு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மலைக்குச் செல்லக்கூடிய பாதைகளில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் தடுப்புகளை மீறி 10க்கும் மேற்பட்டோர் நேரடியாக மலையின் மேல் பகுதிக்குச் சென்றனர். இதனையடுத்து அங்குச் சென்று போலீசார் அவர்களைக் கீழே அழைத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவங்கள் தொடர்பாகவும், காவல்துறையினர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் 15 பேர் மீது அனுமதியின்றி கூடுவது, பொது சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, பிரசாந்த் உள்ளிட 15 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதன்படி பொது அமைதி பங்கம் விளைவித்தாக கூறி, முதற்கட்டமாக இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow Us