பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அன்புமணி மட்டும் பா.ம.கவை தனக்கு சொந்தப்படுத்தி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து வருகிறார்.

Advertisment

அதே சமயம், அன்புமணிக்கு எதிர்திசையில் இருக்கும் கூட்டணியில் ராமதாஸ் இணைய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைவதற்கு ராமதாஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதற்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பே பா.ம.க, பா.ஜ.க இருக்கும் கூட்டணியில் கண்டிப்பாக இணையமாட்டோம் என்று திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால், கூட்டணியில் ராமதாஸை இணைப்பதற்கு திமுக தலைமை தயக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. திருமாவளவன் சம்மதம் தெரிவித்தால் கூட்டணியில் சேர்க்க வாய்ப்புள்ளது என திமுக ராமதாஸுக்கு கண்டிஷன் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் திருமாவளவன் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் இறங்க தயராக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று (25-01-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால் ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “பா.ம.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகள் இருக்கிற அணியில் இடம்பெறுவது இல்லை. அந்த இரண்டு கட்சிகளும் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கின்ற கட்சிகளாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பா.ம.கவின் ஒரு அணி, மோடி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. இன்னொரு அணியை திமுக கூட்டணியில் இணைத்துக் கொள்வது பற்றி திமுக தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். அதில் நாங்கள் எந்த முடிவும் எடுக்கக்கூடிய நிலை இல்லை. நாங்கள் ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து விட்டோம். இப்போதைக்கு முடிவெடுக்கும் நிலை எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.