Thirumavalavan's passionate says Brother Vijay is the son of RSS
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நேற்று (22-12-25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விசிகவினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “திருப்பரங்குன்றம் பற்றி பேச மண்ணின் சொந்தகாரன் என்ற தகுதி எனக்கு உள்ளது. மதத்தை வைத்து அரசியல் செய்யலாம், நமக்கு எதிரான அவதூறுகளை பரப்பலாம், சமூக பதற்றத்தை உருவாக்கலாம் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்பது தான் அந்த கும்பலின் நோக்கம். அவர்கள் யார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மதுரையில் எத்தனையோ பிரச்சனைகள் உண்டு. தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் போராட வேண்டிய பிரச்சனைகள், வாதாட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. ஏன் திமுக அரசை எதிர்த்து போராடுவதற்கு எத்தனையோ பல பிரச்சனைகள் உள்ளன. இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் உள்ளன.
இந்து சமூகத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளுக்கு என்றாவது ஒரு நாள் பா.ஜ.கவை சார்ந்தவர்களோ, அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களோ இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்களோ, இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களோ, அனுமன் சேனா அமைப்பைச் சார்ந்தவர்களோ போராடிய சான்றுகள் உண்டா?. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதாக உறுதியளித்து 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் போட்டிருக்கிறார்களோ, திமுகவும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் தானே தொடர்ந்து போராடி இன்றைக்கு வேலை தொடங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சன்பரிவார் கும்பல் என்றைக்காவது ஒரு நாள் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் கட்டிடத்தை உடனே கட்ட வேண்டும் என்று போராடியதுண்டா? இந்துக்களுக்காகத் தானே நீங்கள் போராடுகிறீர்கள். மதுரை மக்கள் இந்துக்கள் இல்லையா? அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்கு ஏன் போராடவில்லை.
எங்களுக்கு அதிகமான சீட்டு தான் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான் ஒரு பக்கம் பா.ஜ.க, அதிமுக, விஜய் என எல்லோரிடமும் எங்களால் பேச முடியும். ஆனால், எனக்கு அது ஒரு பொருட்டே இல்லை. எல்லா கதவையும் சாத்திவிட்டேன். பா.ஜ.கவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், விஜய்யால் உருவாக்கப்பட்டு களத்துக்கு வந்திருக்கிற அவரும் வேண்டாம் என எல்லா கதவையும் மூடிவிட்டு நான் இங்கு நிக்கிறேன் என்றால் நான் என்ன முட்டாளா? நான் அம்பேத்கரின் மாணவன், பெரியாரின் பிள்ளை, சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நிற்கிறேன்
தம்பி விஜய்யும், தம்பி சீமானும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது, பா.ஜ.கவின் பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொல்கிறார். அந்த தம்பிக்கு நான் சொல்கிறேன். நீங்கள் வெளிப்படையாக வந்துவிட்டீர்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நீங்கள் தமிழ் தேசியம் தான் பேசுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் நாங்கள் நம்பி கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது, நீங்கள்ம் இந்து தேசியம் பேசுகிறீர்கள் என்று. நீங்கள் இந்து தேசியம் கூட பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று நடவடிக்கை. பெரியாரை இழிவுப்படுத்துவதும், பெரியாரின் அரசியலை தகர்ப்பதுமா தமிழ் தேசியம்? இரண்டு பேர் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வியப்பாக இருக்க வேண்டும். புதிதாக கட்சியைத் தொடங்கிய தம்பிக்கு ஒரே ஒரு அஜண்டா தான். திமுக ஒரு தீய சக்தி என்பது தான் அவரது அஜண்டாவாக இருக்கிறது. நீங்கள் திமுகவை திட்டுவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் யார் என்பது தெரிந்துவிட்டது. நீங்கள் தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ் மண்ணுக்காக போராடுவதற்கு கட்சி தொடங்கவில்லை. திமுகவை வீழ்த்த நினைக்கிற ஆர்.எஸ்.எஸுக்காக கட்சி தொடங்கிருக்கிறீர்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us