Thirumavalavan's obsession Is there an indirect deal between DMK and Vijay?
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “கரூரில் ஏற்பட்ட பெருந்துயரத்தில் 41 பேர் பலியானார்கள். அந்த நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலான இளைஞர்கள் போதையில் இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. எனவே, இளைஞர்களை காப்பாற்ற நாட்டை காப்பாற்ற மதுவிலக்கு கொள்கை மிக முக்கியமான ஒன்று விசிக மீண்டும் நினைவூட்டுகிறது. பா.ஜ.க எங்கள் கொள்கை எதிரி என்று மேடைக்கு மேடை விஜய் சொல்லி வருகிறார். விஜய் அதை சொன்ன பிறகு, அவரை காப்பாற்ற பா.ஜ.க ஓடோடி வந்து கரூரில் நிற்கிறது. நிர்மலா சீதாராமன் வருகிறார், எல்.முருகன் வருகிறார், ஹேமமாலினி தலைமையில் 8 நாடாளுமன்ற எம்.பி குழு வருகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை பொறுப்பேற்க வேண்டும், மாவட்ட ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது என்றெல்லாம் மடைமாற்றம் செய்ய பெரும் முயற்சிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.
கொள்கை எதிரி என்று பிரகனடப்படுத்திய விஜய்யை காப்பாற்ற பா.ஜ.க ஏன் இந்த முயற்சிகளை மேற்கொள்கிறது என்று நாட்டு மக்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும். திமுகவை எதிர்க்க வேண்டும், திமுகவை பலவீனப்படுத்த வேண்டும், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பதை செயல்திட்டமாக கொண்டிருக்கிற பா.ஜ.க, விஜய்க்கு துணை போகிறது என்றால் உண்மையை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை, சுதந்திரமாக சிந்திக்கவில்லை, சுதந்திரமாக செயல்படவில்லை. பா.ஜ.கவினுடைய தூண்டுதலின் பேரில் அவர், களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். பா.ஜ.க- அதிமுக கூட்டணியில் விஜய்யை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி சேர்த்துகொண்டால், அது அவர்களுடைய நோக்கத்திற்கு எதிராக போய்விடும். விஜய்யை தனியே நிறுத்தி குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்துவ உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குகளை திமுக கூட்டணிக்கு போகவிடாமல் சிதறடிக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.கவினுடைய நோக்கமே. ஆக, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியிலோ, அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியிலோ த.வெ.கவை இணைப்பது அவர்களுடைய நோக்கம் கிடையாது.
தமிழ்நாடு காவல்துறையினுடைய அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது. ஒரு சம்பவத்தில் சிலர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள், சிலர் மீது வழக்கு தொடுக்கவில்லை. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு தொடுக்கிற காவல்துறை, விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?. இரண்டு பேருமே ஒரே கட்சியில் இருக்கிறார்கள், இரண்டு பேருமே ஒரே செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்த கூடியவர்களாக இருக்கிறார்கள் என்கிற போது புஸ்ஸி ஆனந்துக்கு ஒரு நீதி, விஜய்க்கு ஒரு நீதியா? விஜய் மீது வழக்கு போட முடியாதென்றால் புஸ்ஸி ஆனந்த் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது பதுங்கி இருந்து உடனடியாக வழக்கு போடுகிறார்கள். விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அப்படியென்றால் திமுகவுக்கும் விஜய்க்கும் மறைமுக டீலிங் இருக்கிறது என்ற சொல்லலாமா?. அவர், பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் மறைமுக டீலிங் இருக்கிறது என்று சொல்கிறார். விஜய் மீது வழக்குப்பதியாமல் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதே விஜய்க்கும் திமுகவுக்கும் மறைமுக டீலிங் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பலாமா?.
தமிழ்நாடு காவல்துறையின் இந்த ஓரவஞ்சனையான அணுகுமுறை நல்லதல்ல. யாரை கண்டு அவர்கள் அச்சப்படுகிறார்கள்? யார் அழுத்தம் கொடுத்து இந்த நிலையை எடுத்திருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது. இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல. இந்த மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது விஜய் தான். அவர், 41 பேர் உயிரிழந்ததற்கு கவலைப்படவில்லை, அதற்காக அவருடைய முகத்தில் சோக நிழலே கிடையாது. ரொம்ப ஹஸ்லி குரலில் பேசினால் சோகமாக இருக்கும் என்று நினைத்து பேசியது போல் தான் தெரிந்தது. அவர், அதற்கு உளப்பூர்வமாக வருந்தியதாகத் தெரியவில்லை. சி.எம் சாரை சீண்டுவது தான் அவருடைய நோக்கமாக இருக்கிறது. 3 நாள் அமைதியாக இருந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் காரன், பா.ஜ.க காரன் வந்தததற்கு பிறகு 3 நிமிடம் பேசுகிறார். அப்படியென்றால் அவருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? தன்னை நம்பி வந்த மக்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது? தன்னுடைய ரசிகர்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது?.
விஜய் அரசியலுக்கு வந்தததில் இருந்து அவருக்கு அதிகாரம் மீது ஆட்சி மீதும் மோகமாக இருக்கிறது. அடுத்த முதல்வராக தான் வர வேண்டும் என்பதற்காக திமுகவை குறிவைத்து சாடுகிறார். கருத்தியல் சார்ந்த எந்த பேச்சும் அவர் பேசவில்லை. திமுக வெறுப்பு தான் அவருக்கு. இப்படி பல பேரை தமிழ்நாட்டுக்கு இறக்கிவிட்டிருக்கிறார்கள். அதில் இவர் ஒருவர். திமுகவுக்கு ஆதரவாக நான் இதை பேசவில்லை. தமிழ்நாட்டு அரசியல் நலனுக்காக நான் பேசுகிறேன். இந்த மாதிரி சக்திகளின் கையில் தமிழ்நாட்டு மக்கள் சிக்கிவிட்டால் தமிழ்நாட்டை காப்பாற்றவே முடியாது. இவர்களை வைத்து திமுக அதிமுகவை வீழ்த்திவிட்டு பா.ஜ.க காலூன்ற பார்க்கிறார்கள். அதன் பிறகு இவர்களை தூக்கி எறிவதற்கு பா.ஜ.கவுக்கு ஈசி. அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி டெல்லியில் காங்கிரஸ் அரசாங்கத்தை தூங்கி எறிந்தார்கள். அதன் பின்னர், கெஜ்ரிவாலை தூக்கி எறிந்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்டது. அது தான் நாளைக்கு தமிழ்நாட்டுக்கு நடக்கும்” என்று ஆவேசமாகப் பேசினார்.