மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சி சார்பாக, ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் கடந்த 3ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “ராமதாசுக்கு வேண்டுமானால் எங்கள் ஐயா ஈ.வெ.ரா, பெரியாராக இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய பிள்ளைகளுக்கு ராமதாஸ் தான் பெரியார். தமிழ் பேரின மக்களுக்கான உரிய வகுப்புவாரி பிரதிநித்துவத்தை இட பகிர்வை பெற்று தர போராடி 21 வன்னிய மறவர்கள் இன்னுயிரை ஈந்து போராட்டத்தை தமிழ்நாட்டை உறைய வைத்து போராடி அந்த உரிமையை பெற்று கொடுத்த பெரியவர் ராமதாஸ் .தமிழ் பேரினத்தின் பெரியவர். 85 வயதில் தெருவிலே இறங்கி தமிழை தேடி என்று தெருவிலே நடைபயணம் சென்ற தமிழ் பெருந்தகை ராமதாஸ், தமிழ் பேரினத்தின் பெரியார்.
அதே போல், அடங்க மறு அத்து மீறு திமிறி எழு திருப்பி அடி என்ற முழக்கத்தை முன்வைத்து ஆண்டாண்டு காலமாக தாழ்த்தி வீழ்த்தப்பட்ட ஆதி தமிழ் குடி சமூகத்தை கிளர்ந்தெழ செய்து அமைப்பாய் திரள்வோம் என்று அரசியல்படுத்தி உதிரிகளாக இருந்த மக்களை ஒன்று திரட்டி ஒரு தலைமையின் கீழே கூட்டி இன்றைக்கு ஆட்சி அதிகாரங்களில், சட்டமன்றம், பாராளுமன்றத்திற்குள் செல்கிற வாய்ப்பை பெற்று கொடுத்தார். இன்று வரை அதே நோக்கத்திற்காக போராடி கொண்டிருக்கிற திருமாவளவன் தான் பெரியார். அவருக்கு வேண்டுமானால் ஐயா ஈ.வெ.ரா, பெரியாராக இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய பிள்ளைகளுக்கு வருங்கால தலைமுறைக்கு திருமாவளவன் எங்களுக்கு பெரியார்” என்று கூறினார். தந்தை பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான், பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தான் பெரியார் என்று கூறியிருப்பது தமிழக அரசியலில் விவாதபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “என் மீது அவர் வைத்திருக்கிற இந்த மதிப்பீட்டுக்கு என்னுடைய நன்றியை அவருக்கு உரித்தாக்குகிரேன். பெரியாரை நாங்கள் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு திருமாவளவன் தான் இளம் தலைமுறையினருக்கு பெரியார் என்று சொல்வது ஒரு அரசியல் அணுகுமுறை அல்லது அரசியல் உத்தியாக தான் நான் பார்க்கிறேன். அவர் சாதுரியமாக அல்லது சாமர்த்தியமாக இந்த பிரச்சனையை கையாளுவதாகத்தான் நான் கருதுகிறேன். அவர் பெரியார் வழிவந்தவர், பெரியார் அரசியலை பேசியவர், பெரியார் இயக்கங்களின் மேடைகளில் அரசியல் கற்றுக்கொண்டவர், அரசியலை பேசியவர்.
விடுதலை சிறுத்தைகளின் மேடைகளிலும் முழங்கியவர் என்கிற அந்த உரிமையோடு நான் அவருக்கு தெரிவித்து கொள்ள விரும்புவது பெரியாரின் பகைவர்கள் என்ன உத்தியை கையாளுகிறார்களோ, பெரியாரை வீழ்த்துவதற்காக பெரியார் காலத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கிற சக்திகள் அவர்கள் யார் என்று அவருக்கே தெரியும். அவர்களின் நோக்கம் நிறைவேறுவதற்கு உங்களின் அரசியல் ஏதுவாக அமைந்துவிடக்கூடாது என்பது மட்டும்தான் எங்களுடைய கவலை. அவருக்கு நான் தெரிவிக்க விரும்புகிற செய்தி அதுதான். திக, திமுகவோடு முரண்பாடுகள் இருக்கலாம், அந்த இயக்கத்தை வழிநடத்தக்கூடிய முன்னணி தலைவர்களின் அணுகுமுறைகளில் உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் பெரியாரின் அரசியல் தன்னலமற்ற அரசியல் , ஈகம் நிறைந்த அரசியல், அவருடைய அந்த நிலைப்பாடுகளில் முன்னுக்கு பின் சில முரண்கள் காணக்கூடியதாக இருக்கலாம்.
ஆனால் அவை அனைத்தும் எளிய மக்களுக்கான கோணத்திலிருந்து மட்டுமே அவர் யாவற்றையும் அணுகினார். அதில் எந்த கலங்கமும் இல்லை என்பதை நாம் முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தன்னலம் கருதக்கூடியவராக இருந்திருந்தால் அல்லது தமிழர்களை இழித்து பார்க்க கூடியவராக இருந்திருந்தால் அவரும் அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணித்திருக்க முடியும், பதவியை நோக்கி செயல்பட்டுருக்க முடியும், பொருளாதாரத்தை குறிவைத்து இயங்கி இருக்க முடியும். அப்படி பதவி, அதிகாரம், பொருளாதாரம் தன்னலம் என்கிற அடிப்படையில் அவர் இயங்கவில்லை என்பதை அவர் ஒத்துக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். எனவே பெரியாருடைய பங்களிப்பை அவருடைய இயகத்தை நாம் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடாது கொச்சைப்படுத்த கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/seethi-2026-01-05-07-37-47.jpg)