தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விஜய் கோரிய ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தவெக போட்டியிடும் 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சுயேட்சை சின்னங்களுள் அது ஒரு சின்னம். அதை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வராத கட்சிகளை எல்லாம் மறைமுகமாக பல்வேறு உத்திகளை கையாண்டு மிரட்டி வருகிறது. அது போல், தவெக தலைவர் விஜய்க்கும் பா.ஜ.கவினர் மறைமுகமான அழுத்தத்தை தருகிறார்கள், அல்லது அச்சுறுத்தி வருகிறார்கள் என்பது பலரும் யூகித்துச் சொல்கிற ஒரு செய்தியாகத் தான் இருக்கிறது. அதில் நானும் ஒருவர். அந்த அளவுக்கு விஜய்க்கு நெருக்கடியை பா.ஜ.க தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

Advertisment

விஜய், அப்படி அந்த நெருக்கடிக்கு ஆளாகி, நிர்பந்தத்திற்கு ஆளாகி, அந்த கூட்டணியில் இடம் பெறுவாரேயானால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகிவிடும். அவரை மட்டுமின்றி அவருக்கு வியூகத்தை வகுத்து தருகிற குறிப்பான சில நபர்களையும் பா.ஜ.க விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்துவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. எனவே, விஜய்யை பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைக்க வேண்டும் என்கிற முயற்சி ஒருபுறம் நடக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது” என்று பேசினார். இதையடுத்து ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இதில் அரசியல் தலையீடு இருக்கிறது என்கிற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி அரசியல் தலையீடு குறிப்பாக பா.ஜ.க தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேசி இருக்க வேண்டும், பேச வேண்டும். ஆனால் அவர் மௌனித்திருக்கிறார். அவரை தடுப்பது எது என்கிற கேள்வி எழுகிறது?

நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பாஜகவும் சேர்ந்து அவருடைய திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்குரிய நெருக்கடியை தருகிறதா? என்கிற கேள்விக்கு விஜய்யால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும். ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அவர் பாஜகவையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை, அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது” என்று கூறினார். 
 

Advertisment