தமிழ்நாட்டில் 3 முறை முதல்வராக முதல்வராகப் பதவி வகித்தவரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (27-02-26) முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். மேலும் அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஐயப்பனும் ராஜினாமா செய்தார்.
அதிமுக மூத்த தலைவரான ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றிருந்தார். அதன் காரணமாக தான் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற போது ஓ.பன்னீர்செல்வத்தை தான் வகித்த முதல்வர் பதவியை கொடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நடந்த சர்ச்சை காரணமாக ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி வகித்தார். அதன் பின் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிகார மோதல் ஏற்பட்டது. அதனால் அதிமுகவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரிந்து சென்ற தலைவர்களால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்தார். இந்த நிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததால் கூட்டணி வலிமை பெற்றுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மேலும் வலிமை கூடியிருப்பதாக நான் நம்புகிறேன். அவரை விசிக சார்பில் மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்துகிறோம். முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர். அதிமுகவை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக இயங்கச் செய்ய வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டியதை நாடு அறியும். ஆனால், அவர் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அவர் பா.ஜ.க போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது, நம்பகத்தன்மையை உயர்த்துகிறது.
பா.ஜ.கவோடு நெருக்கமாக இருக்கிறார், பா.ஜ.க சொல்கிறபடி செயல்படுகிறார் என்கிற விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது இருந்தன. ஆனால் இன்றைக்கு அவர் எடுத்திருக்கும் முடிவு அவர் நிதானமானவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழிவந்தவர் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது. இன்றைக்கு திமுக என்கிற ஒரு திராவிட இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு திமுகவை மட்டுமல்லாமல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியையும் அவர் வலிமைப்படுத்தி இருக்கிறார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/opsthiruma-2026-02-27-17-07-42.jpg)