Advertisment

“அமெரிக்க அரசை எதிர்த்து நாம் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்?” - அதிரடியாகப் பேசிய திருமாவளவன்

thirumalok

thirumavalavan speech in lok sabha on operation sindoor debate

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். மேலும், ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாவத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு உயிரிழந்த 26 பேர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரின் நலன்களுக்கு, அரசு என்ன இழப்பீடு தந்தது என்கிற விவரம் தெரியவில்லை. அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதா என்கிற விவரமும் வெளியாகவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை முதலில் ஒரு கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன். அந்த படுகொலையை தடுத்திருந்தால் நாம் பெருமைப்படலாம். இந்த அரசின் நடவடிக்கையை பாராட்டலாம். ஆனால் படுகொலை நிகழ்ந்துவிட்டது, 26 அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலையிலே நாங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி இருக்கிறோம், திருப்பி தாக்கி இருக்கிறோம் என்று பெருமை பொங்க பேசுகிறோம். இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை?

Advertisment

மிகப்பெரிய நாடு, பாகிஸ்தானோடு ஒப்பிடுகிற போது பலமடங்கு வலிமையுள்ள ஒரு தேசம், 140 கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு பெரிய நாட்டை மிக இலகுவாக அவர்கள் உள்ளே புகுந்து தாக்கிவிட முடியும் என்பதற்கு ஒரு சான்றாக இந்த பஹல்காம் தாக்குதல் மீண்டும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். இது நாட்டின் மக்களுக்கு உள்ள பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய ஒரு நடவடிக்கை. உளவுத்ததுறையின் தோல்வி, பாதுகாப்பு துறையின் தோல்வி, ஆட்சி நிர்வாகத்தின் தோல்வி என்பதை சுய விமர்சனமாக முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நம்மை மீண்டும் வலுபடுத்துவதற்குரிய வாய்ப்பை உருவாக்கி தரும்.வெளியுறவு கொள்கையும் தோல்வி அடைந்திருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.காஷ்மீர் தொடர்பாக நாம் எடுத்திருக்கிற நிலைப்பாடும் தோல்வி அடைந்திருக்கிறது என்பதைதான் இந்த தாக்குதல் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டம் உறுப்பு எண் 370ஜ நீக்கிவிட்டால் காஷ்மீர் சுதந்திர தேசமாக மாறிவிடும், பயங்கரவாதம் உற்றாக ஒழிந்துவிடும், பொதுமக்கள் அங்கே சுதந்திரமாக உழவ முடியும், சுற்றுழா வளர்ச்சி அடையும் என்றெல்லாம் நம்முடைய அரசின் தரப்பில் சொல்லப்பட்டது. 370 நீக்கப்பட்டது ஆனால் என்ன நிலை? அதன் பிறகுதானே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. அரசு நமக்கு பாதுகாப்பு தரும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தானே பொதுமக்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டார்கள். ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஊடுருவியது எப்படி? அதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது எப்படி? எல்லை ஓரத்திலே தொடர்ச்சியாக பாதுகாப்பு படை வீரர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தானே பொதுமக்கள் பஹல்காமுக்கு வந்தார்கள். அந்த இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் போனது எப்படி? அந்த இடத்திலே தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து எதிர்த்து போராடிய குதிரை ஓட்டிதான் அந்த இடத்தில் பலியாகி இருக்கிறானே தவிர நம்முடைய பாதுகாப்பு படையைச் சார்ந்த வீரன் யாரும் அதில் பலியாகவில்லை. இது மிகப்பெரிய அளவில் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது, கேள்வியை எழுப்புகிறது.

ஆகவே, காஷ்மீர் தொடர்பாக இந்த அரசு எடுத்த நிலைப்பாடு படுதோல்வி அடைந்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் உறுப்பு எண் 370 நீக்கப்பட்டது படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு காஷ்மீர் ஜம்மு மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று அரசிற்கு நான் வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த பயங்கரவாத தாக்குதலால் இப்போது சுற்றுலா அங்கே பாதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா மூலம் மட்டுமே பெரும்பான்மையான வருமானத்தை கொண்டிருக்கிற மாநிலம் ஜம்மு காஷ்மீர். இன்றைக்கு அதனால் ஏற்பட்டிருக்கிற பாதிப்பை ஈடு செய்யும் வகையிலே நம்முடைய ஒன்றிய அரசு சிறப்பு பொருளாதார உதவியை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு  வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 2023- 2024ஆம் ஆண்டின் போது, பாதுகாப்பு நிலைக்குழு இது தொடர்பான ஆய்வை செய்து விமானப்படையில் போதிய விமானங்கள் இல்லை, விமானப்படை மேலும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும், இன்னும் பைலட்டுகள் விமான ஓட்டிகளின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் போன்ற பரிந்துரைகளை வழங்கியது. ஆனால் இதுவரையில் அது குறித்து அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. நாம் சொல்லுகிறோம் அவர்களை துல்லியமாக தாக்கினோம். அந்த பயங்கரவாதிகளின் பதுங்கு முகாம்களை அழித்தோம் என்றெல்லாம் பெருமை பொங்க சொல்லுகிறோம். பாகிஸ்தான் அரசும் அப்படித்தான் சொல்லுகிறது. ஸ்ரீநகர், ஜம்மு, பூஜ், பத்திண்டா போன்ற பல பகுதிகளை சுட்டிக்காட்டி இங்கெல்லாம் நாங்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறோம். ரஃபேல் விமானங்கள் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

இது எது உண்மை என்பது நமக்கு தெரியவில்லை, பொதுமக்களுக்கு புரியவில்லை. ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மையாக இருந்தால் அந்த விமான தொடர்பாக நடந்த ஊழல் குறித்த விசாரணை தேவைப்படுகிறது. ரஷ்யாவை மட்டுமே ராணுவ தலவாடங்களுக்கு நம்பி இருப்பதை அரசு கைவிட வேண்டும். இன்னும் பல நம்பிக்கைக்குரிய நாடுகளோடு ஒப்பந்தம்போட்டுக்கொண்டு அந்த ட்ரோன் போன்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சர்வதேச அரங்கில் இந்திய தேசத்தின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தவிவகாரத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை எத்தனை நாடுகள் கண்டித்திருக்கின்றன? அமெரிக்க அரசின் நிலைப்பாடு என்ன? அந்த நாட்டின் ராணுவ அதிகாரியை அழைத்து அவர் விருந்து கொடுக்கிறார். அதற்கு என்ன பொருள்? இந்தியா எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை என்று ட்ரம்ப் வெளிப்படையாக சொல்லுகிறார். இந்த போரை நான்தான் நிறுத்தினேன், இந்திய அரசு நிறுத்தவில்லை என்று சொல்லுகிறார். நம்முடைய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கக்கூடிய அமெரிக்க அரசை எதிர்த்து நாம் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்? அங்கே சட்டவிரோதமாக தங்கி இருக்கிற இந்திய குடிமக்களை கால்விலங்கு கைவிலங்கு போட்டு விலங்குகளை விட மோசமான முறையிலே கொண்டு வந்து இங்கே இறக்கினார்கள். ஒரு வார்த்தை அமெரிக்காவை நாம் கண்டிக்கவில்லை. ஆக நம்முடைய அரசின் வெளியுறவு கொள்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் ஒன்றை சொல்லி நான் முடிக்க விரும்புகிறேன். வெளியுறவு கொள்கையில் நமக்கு பெரும் தோல்வி அடைந்திருப்பதை போல உள்நாட்டில் நாம் மக்கள் ஒற்றுமை குறித்து கவலைப்படாமல் இருக்கிறோம். இங்கே மதவாத அடிப்படையில் முஸ்லிம் வெறுப்பையும் கிறிஸ்த்தவ வெறுப்பையும் நாளுக்கு நாள் அதிகரிக்க செய்கிறோம். நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பது சர்வதேச அரங்கில் தெரிகிறது. ஒற்றுமையை உருவாக்குவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும், வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான விருப்ப அரசியலை அடையாளப்படுத்தக்கூடிய வகையில் துருக்கிக்கு எதிரான நடவடிக்கை இந்த அரசு மேற்கொள்கிறது, சீனாவுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது முஸ்லிம் வெறுப்பை வெளிவிவகார கொள்கையிலும் நாம் உட்படுத்துகிறோம் என்பதை காட்டுகிறது. எனவே, மதவாத அரசியலும் நம்முடைய தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வெறுப்பு அரசியலை அரசு கைவிட வேண்டும். உள்நாட்டு மக்களின் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் வெளிவிவகார கொள்கையை ஒரு நாட்டை மட்டுமே சார்ந்திருக்காமல் நாம் அனைத்து சர்வதேச நாடுகளோடும் நல்லிணக்கமான உறவை பேண வேண்டும்” என்று பேசினார். 

Operation Sindoor monsoon session PARLIAMENT SESSION lok sabha Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe