தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (06.11.2025)  நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும்  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கபப்ட்ட கருத்துக்கள் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தன்னெழுச்சியாகத் திரள்வார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர் வழிபாட்டுக்கும், கும்பல் கலாச்சாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது.

Advertisment

பெருமளவில் பொருளைச் செலவிட்டுத் திரட்டப்படும் நிலையில் மக்களைக் காட்சிப் பொருட்களாகக் கருதும் மனப்போக்கும் அவ்வாறு திரட்டும் கட்சியினரிடையே வளர்கிறது. குறிப்பாக, தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிக் கடுமையான வெயிலில் அவர்களை காக்க வைத்து அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ரோடு ஷோக்கள் என்ற பெயரில் சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் அரசியல் தலைவர்கள் தமது செல்வாக்கைக் காட்டுவதற்காக செயற்கையாகக் கூட்டங்களை கூட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொருளிழப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதன் உச்சகட்டமாகவே கரூரில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளன.

இத்தகைய ரோடு ஷோக்களை நடத்துவது தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கட்சிகளிடையே சமனற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது. பணம் உள்ள கட்சிகள் இத்தகைய ரோடு ஷோக்களை நடத்தித் தமக்கு செல்வாக்கு இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இது வாக்காளர்கள் மீது தாக்கத்தை உண்டாக்குகிறது. பணம் இல்லாத கட்சிகள் இதைச் செய்ய முடிவதில்லை. ‘ஒருவருக்கு ஒரு வாக்கு எல்லா வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு’ என்ற அரசியல் சமத்துவத்தை உறுதி செய்த வயது வந்தோருக்கான வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டது நமது நாடாளுமன்ற ஜனநாயகமாகும். கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு செயற்கையாக மக்களைத் திரட்டுகிற அரசியல் நடவடிக்கைகள் இந்த அரசியல் சமத்துவத்தை சீர்குலைக்கின்றன.

Advertisment

இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேசியக் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அரசியல் கட்சிகள், ஆகியவற்றுக்கிடையே நடைமுறையில் சில பாகுபாடுகளைக் காட்டுகிறது. எனினும், அரசியல் சமத்துவம் என்பதைத் தேர்தல் ஆணையம் கைவிட்டு விடவில்லை. ரோடு ஷோக்கள் என்கின்ற முறை அரசியல் பரப்புரையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தினால் தேர்தல் காலங்களில் அவற்றைத் தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கிறது. மற்ற நேரங்களிலும் இவற்றை முறைப்படுத்துவது அவசரத் தேவையாகி உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களைத் திரட்டும் போது உயிரிழப்புகள், பொருள் இழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மக்கள் திரள் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

இந்நிலையில், எமது கட்சியின் சார்பில் பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கிறோம். காலம் காலமாக அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வரும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு போன்ற வடிவங்களே தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும். தற்போது நடைமுறையில் உள்ளதைப்போலவே அவற்றுக்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட வரைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றாலும்' அவற்றை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்களை வெறுமென வாக்குப் பண்டங்களாகக் கருதி, கூலி கொடுத்து திரட்டி, மணிகணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் ரோடு ஷோ வடிவம் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். தேர்தல் பரப்புரையின் போதும் வாக்கு சேகரிக்கிறோம் என்கிற பெயரில் வீதிவீதியாக, ஒலிபெருக்கிகளின் பேரிரைச்சலுடன் பெரும்படையோடு செல்லும் போக்கையும் தடைசெய்ய வேண்டும். மாறாக, வாக்காளர்களிடம் தமது கருத்துகளை எடுத்துச் சொல்வதற்குப் பொதுக்கூட்டம் என்ற வடிவத்தைமட்டுமே அனுமதிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெருகியுள்ள நிலையில் அவற்றின் மூலமாகவே தேர்தல் பரப்புரை நடைபெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களிடம் நேரடியாக வாக்குத்திரட்டும் நடவடிக்கைகளால், ஏராளமான பொருள் செலவுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகுப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையில் பிரிவினை உணர்வு தலை தூக்குவதற்கும் காரணமாகிறது. எனவே, வேட்பாளர்கள் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாகவே வாக்கு சேகரிப்பதை ஊக்குவிக்க வேண்டும். நேரடியாக வாக்காளர்களிடம் செல்வதைத் தடுக்க வேண்டும். சமூக ஊடகங்களின் பெருக்கம் வெறுப்புப் பரப்புரை பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. வெறுப்புப் பரப்புரையைத் தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்துக் காலங்களிலும் முற்றாகத் தடுப்பதற்கான வழிமுறைகள் வருக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.