Thirumavalavan says Someone has taught Vijay to speak
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (18-12-25) நடைபெற்றது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தமிழகத்தில் விஜய் மேற்கொண்ட இந்த பரப்புரையில் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய் பேசிய போது, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு திமுகவை அவர்கள் இருவரும் திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேன். அவர்கள் இரண்டு பேர் சொன்னதை இப்போது நானும் திருப்பி சொல்றேன், திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று (19-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என்று விஜய் பேசியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அடுக்குமொழியில் பேசுவதற்கு யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள். தூய சக்தி, தீய சக்தி யாரென்று மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.
Follow Us