கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த 41 பேருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் விசிக அலுவலகத்தில் 41 பேருக்கும் அகல்விளக்கு ஏற்றி மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணத் தொகையை வரும் 11ஆம் தேதி வழங்கவுள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. ஆனால், அந்த தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கொடுந்துயரில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பா.ஜ.க அதன் கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. நடிகர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும், சிறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அந்த வெளிப்பாடு அவருடைய நடவடிக்கைகளில் இல்லை என்பதற்காக தான் நாங்கள் விமர்சனம் செய்கிறோம். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் நேர்மையாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நோக்கி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பை வீச முயற்சித்திருக்கிறார். ஒரு கோயில் புணரமைப்பு தொடர்பாக வழக்கை முன்னுரிமை அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று சொன்ன போது தலைமை நீதிபதி சொன்ன கருத்தை ஏற்க இயலாமல் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தலைமை நீதிபதி மீது அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கின்ற இயல்பான வன்மம் தான் இதற்கு காரணம். பி.ஆர்.கவாய், பெளதத்தை தழுவியவர் என்றாலும் அவர் அம்பேத்கரிய சிந்தானையாளர். இங்கு தலித், தலித் அல்லாதோர் என்பதை பற்றி பேசவில்லை. இந்தியாவில் மிக உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கக்கூடிய தலைமை நீதிபதி மீது செருப்பை வீச முயற்சி நடந்திருக்கிறது. சனாதன சங்கிகளுக்கு, ஒரு அம்பேத்கரியவாதி தலைமை நீதிபதியாக அமர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது.
பா.ஜ.கவினருக்கு உண்மையிலேயே சொரணை இருந்தால் பா.ஜ.க தான் தன்னுடைய கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்த நிலையில், விஜய்யோடு அவர்கள் வலிந்து உறவாட மாட்டார்கள். பா.ஜ.க பேசுகிற கொள்கையில் அவருக்கு உடன்பாடு இல்லை. உங்களை எதிரி என்று அவர் பிரகடனப்படுத்திருக்கிறார். பிறகு எந்த அடிப்படையில் எந்த முகத்தை வைத்து கொண்டு அவருக்கு ஆதரவு தருகிறீர்கள்?. போதுமான இடம் கொடுக்கவில்லை என்றால் ஏன் கூட்டத்தை தவெக நடத்த வேண்டும்?. உயர் நீதிமன்றத்தை அணுகி உரிய இடத்தை வாங்கிருக்கலாம் அல்லது கூட்டத்தை தள்ளி போட்டிருக்கலாம். இந்த இடம் போதாது என்று நினைத்தால் வேண்டாம் என்று சொல்லிருக்கலாமே?. ஏன் அங்கு நடத்துனீர்கள்? காவல்துறை உங்களை கட்டாயப்படுத்தியதா? அல்லது ஒப்பந்தம் போட்டதா?. அவர்கள் செந்தில் பாலாஜி மீது பழி போட நினைக்கிறார்கள். மேற்கு மாவட்டங்களில் செந்தில் பாலாஜி தேர்தல் வேலையை செய்ய விடாமல் தடுக்க வேண்டும் என்று பா.ஜ.கவினுடைய நோக்கம். அதனால், இந்த பிரச்சனையை அவர் மீது தூக்கி போடலாம் என்று நினைக்கிறார்கள்.
அதிமுக, பா.ஜ.க கடந்த 2021ல் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்த தேர்தலில் அவர்கள் படுதோல்வியை அடைந்தார்கள். நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது சரி தான். ஆனால், எதற்காக அவர்கள் உண்மை அறியும் குழுவை அமைக்கிறார்கள்?. அவர்கள் தன்னிச்சையாக உள்ளே நுழைந்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். எப்படி 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது என்று கேட்கிறார்கள். இதெல்லாம் அரசியல் அறியாமையில் கேட்கின்ற கேள்வி. 10 நிமிடத்தில் வந்தால் பாராட்ட தானே செய்ய வேண்டும். முதல்வரும், அமைச்சர்களும் நள்ளிரவிலே பொறுப்புணர்வு அங்கு வந்தால் பாராட்ட தானே செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தன்னுடைய தொண்டர்களுக்கு நள்ளிரவிலேயே ஆறுதல் தெரிவித்த முதல்வருக்கு விஜய் நன்றி தானே சொல்லி இருக்க வேண்டும். பா.ஜ.க அவரை கையில் எடுப்பதற்கு பகிரங்க முயற்சி செய்கிறது. அவர் இந்த சதிகார, சூழ்ச்சிக்கார சக்திகளிடம் சிக்கி இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்க நேரும். அதில் இருந்து அவர் விடுபட வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று தான் என்னுடைய வேண்டுகோள்.
திரிபுவாதம் செய்வதில் உலகத்திலேயே கெட்டிக்காரர்கள் யாரென்றால் அது பா.ஜ.க தான். கோட்சேவை தேசப்பக்தர் என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்த தேசத்தை கட்டுமானம் செய்வதில் மிகப்பெரிய பங்கு வகித்தது என்று அஞ்சல் தலை வெளியிடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் தேச விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?. அந்த இயக்கம் தேசவிரோத இயக்கம் என்று பலமுறை தடை செய்யப்பட்ட இயக்கம். அது போல், இங்கேயும் திரிபுவாதம் செய்கிறார்கள்” என்று கூறினார்.