அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டணி அறிவித்ததில் இருந்து கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சாபில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அமித்ஷா, “அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் அதிமுகவில் இருந்து முதல்வர் வேட்பாளர் வருவார் என்றும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா பேசியிருந்த நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நேற்று (29-06-25) நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கின்ற நோக்கமே, வாக்குகள் சிதறாமல் நமக்கு வேட்பாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். திமுக இந்த தீய சக்தி மக்கள் அரசை அகற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் கூட்டணி வைக்கின்றோம். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துவிட்டார், பா.ஜ.க அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என்று சொல்கிறார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. அதிமுக சுமார் 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. 2026இல் நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்” என்று பேசினார். இவரது பேச்சு தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக ஆட்சிதான் என பா.ஜ.கவுக்கு இபிஎஸ் விளக்கம் கூறியுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு நீதித்துறை வழங்கியிருக்கிற தீர்ப்பு ஒரு ஜனநாயக படுகொலை. இதனை அரசியல் கட்சிகள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முதலில் விசிகவினுடைய கொடி கம்பங்களை அகற்றுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். பல அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் பாதுகாப்பாக இருக்கிற போது விசிகவினுடைய கொடிக் கம்பங்களை அகற்றுவதில் அதிகாரிகள் முனைப்பு காட்டுவது வன்மையாக கண்டனத்துக்குரியது. திமுக, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் இந்த அரசியல் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.

Advertisment

அதனை தொடர்ந்து அவரிடம், அதிமுக தனிப்பெருங்கட்சியாக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், “அமித்ஷா மட்டும் தான் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்று சொல்லி வருகிறார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எந்தவித கருத்தும் சொல்லாமல் மெளனம் காக்கிறார் என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். தற்போது எடப்பாடி பழனிசாமி அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற பதில், பா.ஜ.கவுக்கு தான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கூட்டணி ஆட்சி இங்கு இல்லை, அதிமுக அதற்கு உடன்படாது என்ற விடையை பா.ஜ.கவுக்கு தான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதே போல், அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்பதை அவர் சொல்லியிருக்கிறார். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுப்படுத்த வேண்டும். அதிமுகவை திமுக தலைமையிலான கட்சிகள் கபளீகரம் செய்ய வாய்ப்பில்லை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளவும் முடியாது. கூட இருக்கும் கட்சிகளால் மட்டும் தான் விழுங்கி செறிக்கிற முயற்சியை மேற்கொள்ள முடியும். ஆகவே, அந்த கருத்தும் பா.ஜ.கவுக்கு தான் சொல்லியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. எனவே, அதிமுக - பா.ஜ.கவுக்கும் இடையே ஒரு இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை” என்று கூறினார்.