தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

இந்த நிலையில், 2026இல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் என விசிக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவிக்குமார் எம்.பி, “விசிக தேர்தல் அரசியலில் வந்ததில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நாங்கள் முன்வைத்து வருகிற கருத்து. 2016ஆம் ஆண்டு ஒவ்வொரு கட்சித் தலைவரை அழைத்து ஒரு கருத்தரங்கத்தை நடத்தி அந்த கருத்தை விசிக முன்னிருத்தியது. அதற்கான காலம் கனியும் நேரத்தில் அந்த கருத்தை சரியான முறையில் விசிக முன் வைக்கும். 2026ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். திமுக தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். இரட்டை இலக்க இடங்களை திமுகவிடம் விசிக கேட்கும்” என்று கூறினார்.

Advertisment

ரவிக்குமார் பேசியது குறித்து விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் இந்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைக்கவில்லை என்ற பொருளில் அவர் பேசியிருக்கிறார். 2026 தேர்தலில் அது எங்களுடைய கோரிக்கையாக இருக்காது. அதை இப்போது நாங்கள் வலியுறுத்த மாட்டோம். அந்த கருத்தை நாங்கள் கைவிடவில்லை. பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை இந்த தேர்தலில் நாங்கள் ஒரு நிபந்தனையாக வைக்க மாட்டோம்” என்று கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்’ என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment