Thirumavalavan said he hope the DMK Congress alliance will last
திமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்புகளும் சர்ச்சைகளும் நிலவி வரும் இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இன்று (17-02-26) தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், அரசு வழங்கியுள்ள 5000 ரூபாய் மகளிர் உரிமை தொகை, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அந்த வகையில், அவர் பேசியதாவது, “அரசிற்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கூட, திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதல்வர் தீவிரம் காட்டியுள்ளார். அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே (கோடைக்கால சிறப்புத் தொகுப்பு உட்பட) உள்ளிட்ட மாதங்களுக்கான உரிமைத் தொகை மொத்தமாக 5000 ரூபாயாக மகளிர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை பொதுமக்கள், பெண்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் என அனைவரும் வரவேற்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலைக் காரணம் காட்டி பாஜகவைச் சார்ந்தவர்கள் இந்த மகளிர் உரிமைத் தொகையை வழங்கவிடாமல் தடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்திற்கு சட்டப்பூர்வமான எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களின் சதியை முறியடித்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தைப் பொறுத்து அந்தந்த கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பார்கள். அந்த வகையில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்த காலத்திலிருந்தே முன் வைத்து வருகிறது. இது அதிகாரத்தைப் பரவலாக்கக்கூடிய ஒரு கோரிக்கை. இருப்பினும், தற்போது கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சூழல் அமையவில்லை. அதே நேரத்தில், இந்த தேர்தலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம். அதனால் இந்த கோரிக்கை சம்பந்தமாகக் கூட்டணிக் கட்சிக்கு நாங்கள் அழுத்தம் தரவில்லை.
காங்கிரஸ் கட்சி இப்படியான ஒரு கோரிக்கையை முன் வைப்பதற்கு, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே, கூட்டணி ஆட்சி தமிழகத்திற்குப் பொருந்தாது என்று பதிலளித்துள்ளார். இருப்பினும், காங்கிரஸ் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருவதால் கூட்டணி சிதறிவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நான் நம்புகிறேன், திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். அவர்கள் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையின் மூலமாகப் பேசி தீர்த்துக் கொள்வார்கள். ராகுல்காந்தி அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள், கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இடையில், மாநில பிரதிநிதிகள் சிலர் கூட்டணி குறித்து வெளியிடும் கருத்துக்கள் இறுதி முடிவு கிடையாது. அதனால், அவர்களின் கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவை இல்லை. காங்கிரசின் தேசிய தலைமையும், திமுக தலைமையும் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும். திமுக கூட்டணியில் தற்போது சில சலசலப்புகள் இருக்கலாம், ஆனால், கடைசி நேரத்தில் சுமுகமான முறையில் தீர்வு காணப்படும்” என்று கூறினார்.
Follow Us