சென்னை அம்பத்தூரில் நேற்று (08-08-25) கலைஞரின் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, “தமிழ்நாட்டில் கலைஞர் எதிர்ப்பு அரசியல் மட்டுமே 50 ஆண்டுகளாக இருக்கிறது. பார்ப்பனிய சக்திகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்கிற திமுகவை உடைத்து ஒரு இயக்கத்தை உருவாக்கி திரைப்படத்தில் மிகப்பெரும் புகழை பெற்ற ஒரு ஆளுமையை எதிர்ப்புறத்தில் நிறுத்தி கலைஞருக்கு எதிரான வெறுப்பு இங்கே திட்டமிட்டு கட்டி எழுப்பப்பட்டது. எம்.ஜி.ஆர் கலைஞருக்கு எதிராக விமர்சனம் செய்தார், வெறுப்பு அரசியலை விதைத்தார், திராவிட இயக்கத்திற்குள்ளே பார்ப்பனியத்தை ஊடு செய்வதற்கு காரணமாக இருந்தார், ஒரு பார்ப்பன பெண்மணியே ஒரு திராவிட இயக்கத்தின் தலைவர் ஆவதற்கு அவர் பாதை வகுத்து தந்தார் என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஒரு நன்மை வாய்தத்து என்னவென்றால் தேசிய கட்சிகள் இங்கே காலூன்ற முடியாமல் தடுக்க முடிந்தது” எனப் பேசினார். இவரது பேச்சு, தற்போது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Advertisment

எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்ஜிஆரை விமர்சனம் செய்தால், திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார். அதிமுக ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்ட இயக்கம். எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், இப்போதும் ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கட்சியாகவே அதிமுக உள்ளது. அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளோம். இது, சிலருக்குப் பொறுக்கவில்லை; எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அவர்கள் அரசியலில் நினைத்தது நடக்கவில்லை. அந்த வெறுப்பு காரணமாகவே இப்படி வார்த்தைகளைக் கக்கியிருக்கிறார்” என்று கூறினார்.

Advertisment

இந்நிலையில், எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. கடந்த 60 ஆண்டுகால தமிழ்நாடு அரசியல் குறித்த பேச்சில் எம்.ஜி.ஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது எனக்கு அதீதமான மதிப்பு உண்டு, அவர்களை பலமுறை பாராட்டியுள்ளேன். எம்.ஜி.ஆரை ஒரு ஜாதிக்குள் சுருக்கவில்லை, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கலைஞரை எதிர்த்த அளவிற்கு அதிமுக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்ப்பனர்கள் எதிர்க்கவில்லை” என்று கூறினார்.