தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05-07-25) அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேடையில் விஜய் பேசுகையில், “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது.

பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் பாஜக வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக்குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை தமிழக வெற்றிக் கழகம். கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதையும் உறுதிப்பட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே கொள்கை எதிரிகள் என்று அவர் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால், அதிமுகவை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. விமர்சனமாக சில கருத்துக்களை சொன்னாலும் கூட அதிமுகவும் எங்கள் எதிரி தான் என்று கொள்கை பகை தான் அவர் அறுதியிட்டு சொல்லவில்லை. அங்கே ஒரு கேள்வி எழுகிறது. ஆகவே, திமுகவை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார், பா.ஜ.கவை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்ற அடிப்படையில் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும், அதிமுகவை தோழமை கட்சியாக அவர் பார்க்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு அவர் தான் விடை சொல்ல வேண்டும்.