கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் தனது துக்கத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் , சி.எம் சார் பழிவாங்க வேண்டுமென்றால் என்னை பழிவாங்குகள், தொண்டர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று குற்றம் சாட்டினார். உயிரிழப்பு சம்பவங்களுக்கு பொறுப்பேற்காமல், திமுக அரசு மீது விஜய் பழிபோடுவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், 1 வாரம் ஆகியும் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசியலில் கடந்த 1 வார காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (06-10-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கரூர் பெருந்துயர நிகழ்வில் முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கை போற்றுதலுக்குரியது. மிகுந்த பெருந்தன்மையோடு அவர் நடந்துகொண்டார் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அரசியல் ஆதாயத்துக்காக இதனை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இது தமிழக அரசியலுக்கு உகுந்தது அல்ல.

விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்த காழ்ப்புணர்வும் இல்லை, வன்மமும் இல்லை. தன்னியல்பாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்துள்ளனர். இதில் யாருக்கும் குற்ற நோக்கம் கிடையாது. இந்த சம்பவம் நடக்க வேண்டும், இதில் பலரும் உயிரிழக்க வேண்டும் என்று விஜய்யோ அல்லது மற்றவர்களோ திட்டமிட்டு செய்ய வாய்ப்பில்லை. ஆனால், விஜய்யும் அவரை ஆதரிப்பவர்களும் இதற்கு தொடர்ந்து உள்நோக்கம் கற்பிப்பதால் விஜய் குறித்தும் விஜய் கட்சியினர் குறித்து விமர்சிக்க வேண்டியிருக்கிறது. அவரை கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு அல்ல. ஆனால் அவர் அதற்கு வருந்திருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, அரசியல் ஆதாயம் கருதி இதனை அரசியல் உள்நோக்கத்தோடு மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தான் கவலையளிக்கிறது.

Advertisment

பா.ஜ.கவினர், விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதவில்லை, நம்பவும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனால், திமுக எதிர்ப்பில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என்று என்று திமுக பலவீனப்படுவதற்கு அவர் பயன்பெறுவார் என்று பா.ஜ.கவினர் கருதுகிறார்கள். தனது கொள்கை எதிரி என்று அறிவித்து அவர் பா.ஜ.கவை விமர்ச்த்தாலும், அவருக்கு வலிந்து ஆதரவு தருகிறார்கள். எனவே, பா.ஜ.கவின் நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அதற்கு விஜய் பலியாகிவிடக் கூடாது என்று தான் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறேன்” என்று கூறினார்.