Thirumavalavan MP warns Vijay is a tool of the BJP
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து த.வெ.க தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், சி.எம் சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் பேசினார். அவருடைய கருத்துக்கு தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, விஜய்யின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், விஜய் பா.ஜ.கவின் கருவி என்று விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த செப் 27 இரவு 7.30 மணியளவில் கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தது நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களின் பொறுப்பில்லாத போக்குகளால் நேர்ந்த பேரிடராகும். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதனால் உயிர் பிழைத்துள்னனர். தமிழ்நாடு அரசு, குறிப்பாக, முதலமைச்சர் மேற்கொண்ட அதிவிரைவான நடவடிக்கைகளே உயிரிழந்தோரின் எண்ணிக்கை மென்மேலும் பெருகாமல் தடுக்கப்பட்டன. அந்த பெருந்துயரம் குறித்து தகவலறிந்த உடனே மின்னல் வேகத்தில் இயங்கி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை களமிறக்கிவிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியதோடு சில மணி நேர இடைவெளியில் தனிவிமானம் பிடித்து நள்ளிரவு வேளையில் கரூருக்குச் சென்று அங்கே கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மற்றவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதனை நாட்டுமக்கள் நன்கறிவர்.
ஆனால், விஜய் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவர் மீதான பரிவுணர்ச்சியும் வீண் என்று எண்ணிட வைத்துள்ளது. நடந்த பெருந்துயரத்திற்காக அவர் வருந்துவதாகத் தெரியவில்லை. பத்துமணி நேரமாகத் தன்னைக் காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைப்பதற்கும் இடமில்லாத அளவுக்கு ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து வெளியேறிவிடவேண்டும்; தம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற பதைப்பில் ஒருவருக்கொருவர் நெட்டித் தள்ளி, ஏறிமிதித்துத் தப்பிக்க முயன்ற நிலையில்தான், இந்தப் பேரவலம் நடந்தேறியது என்கிற உண்மையை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை உணர்ந்திருந்தாலும் அதனை வேண்டுமென்றே திட்டமிட்டே மறைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார் என்பதிலிருந்து அவர் இந்த உயிர்ப்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக்க் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்.
அந்த உயிர்ப்பலிகள் திடுமென வன்முறை வெடித்ததால் நேர்ந்த கொடூரமா? அல்லது நெடுநேர நெரிசலால் அங்கே குவிந்திருந்தவர்கள் நா வறட்சிக்குள்ளாகி, மிதிபாடுகளில் நசுங்கி மூச்சுத்திணறலுக்கு ஆட்பட்டதால் நேர்ந்த பேரவலமா? அவை ‘நெரிசல் சாவுகள் தான்’ என்பது பாதிக்கப்பட்ட தொண்டர்களின் குடும்பத்தினரும் நாட்டுமக்களும் கண்கண்ட பேருண்மை ஆகும். ஆனால், இது வெளிப்புறத்திலிருந்து யாரோ தூண்டிவிட்டதனால் அரங்கேறியது என்கிற தவறான கருத்துருவாக்கத்தை உருவாக்கிப் பாதிப்படைந்த மக்களை மீண்டும் ஒரு மாயைக்குள் வீழ்த்திட விஜய் தரப்பினர் முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விஜய்க்குத் தவறான வழிகாட்டுதலையும் திமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியலைப் போதிப்பதையும் துணிந்து செய்பவர்களின் கோரப்பிடியில் அவர் சிக்கியுள்ளார் என்றே உணரமுடிகிறது. அவர் இதனை உணர்ந்திட முயற்சிக்கவில்லை என்றால், இவர் மற்றவர்களின் கைக் கருவியாக முடங்கும் நிலையே உருவாகும்.
‘பாஜக சொல்வதையே விஜய்யும் சொல்கிறார்’ என்று பாஜக மேலிடம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைச் சார்ந்த அனுராக் தாகூர் கூறுவதிலிருந்தே, அவர் யார் பிடியில் சிக்கி உழலுகிறார் என்பதை அறியமுடிகிறது. பாஜக உண்மை அறியும் குழுவை அமைத்திருப்பதிலிருந்தும், திமுக அரசுக்கு எதிராக இச்சூழலை மடைமாற்றம் செய்ய முயற்சிப்பதிலிருந்தும், தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்து வெளிப்படையாகவே தங்களின் சித்துவிளையாட்டைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும்; விஜய் ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் இத்தகு சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் காட்டிய அரசியல் சூது-சூழ்ச்சி போன்ற கைவரிசைகளையெல்லாம் தமிழ்நாட்டிலும் செய்துகாட்ட முயற்சிக்கும் சங்பரிவார்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அவர்களின் அரசியல் சதிகளை முறியடிக்க அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒரணியில் திரண்டு நிற்கவேண்டியது தவிர்க்க முடியாததாகும்” எனத் தெரிவித்துள்ளார்.