கோப்புப்படம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை, விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (19.11.2025) சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள், இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய பல்நோக்கு பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் என பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலினின் பார்வைக்குக் கொண்டு சென்றோம்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், பணியாளர்கள் என்று அவர்கள் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து அது குறித்து விரிவாகப் பேசி இருக்கிறோம் என்றாலும் கூட அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழலில் இப்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக இதில் தலையிட வேண்டும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முதல்வருக்கு வைத்திருக்கிறோம். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள வேலு ஆசான் உள்ளிட்ட விருதாளர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வழங்கப்பட்டு வருவதைப் போன்று மாதாந்திர தொகை 20 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வேலு ஆசான் சுட்டிக்காட்டினார். முதல்வரைச் சந்தித்து அந்த கோரிக்கையும் வைத்திருக்கிறோம்.
அவர் பறை இசை பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியை உருவாக்குவதற்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முதல்வரிடத்திலே முன்வைத்திருக்கிறார். மிகவும் அபாயமான தொழிலகங்களில் பெண்கள் பணியாற்றக் கூடாது என்பது ஏற்கனவே இருந்த சட்டம். ஆனால் இப்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசிதழில் கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் தொழிலகங்களில் பணியாற்றத் தேவையில்லை. பிற பெண்கள் பணியாற்றலாம் என்கிற பொருளில் அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. அதை நீக்க வேண்டும். பொதுவாகப் பெண்கள் 20க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிலகங்களில் பணியாற்றக் கூடாது என்கிற பழைய நிலையை நீடிக்க வேண்டும். இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று 30க்கு மேற்பட்ட தொழில் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அந்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Follow Us