திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் கடந்த 27ஆம் தேதி சூரஜ் என்ற வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் திருத்தணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வடமாநில இளைஞர் சூரஜை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே சமயம் சூரஜ், சிறுவர்களால் தாக்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்'
என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us