சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று (14-12-25) காலை 9:30 மணிக்கு சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தொடரில்,சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சாதி பெயர்களை பயன்படுத்தக்கூடாது, அவற்றை அறவே நீக்கவேண்டும் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதனை விசிக மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறோம். முதல்வரைச் சந்தித்து அந்த அரசாணையை வெளியிட்டதற்காக, அதனை முறைப்படி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக விசிக சார்பில் நன்றி தெரிவித்தோம். அதே போல், இன்னும் சில சாதிகளில் ‘ன்’ விதிகள் உள்ளது. அந்த ‘ன்’ விதிகளை அகற்றி பிற சாதிகளை போலவே, ‘ர்’ விதி பொருந்தும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறது. இருந்தாலும் அதனை சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தோம்.
நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்கள், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு சென்றோம். பள்ளிக்கல்வித்துறை நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்திருக்கிறோம்” என்று கூறினார். அதனை தொடர்ந்து கோயமுத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ‘ஜி.டி.நாயுடு மேம்பாலம்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள், இதில் சாதி பெயர் வருவது முரணாக இருக்கிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடையாளங்களோடு இருக்கக்கூடாது என்பது தான் நமது கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சாதி அடிப்படையில் சில தலைவர்களின் பெயர்கள் புலக்கத்திற்கு வந்து அவை நிலைபெற்றுவிட்டன. அதனால், அவர்கள் சாதி பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. சாதி ஒழிப்பு அரசியல் வலுபெறுவதற்கு முன்பிருந்த காலங்களில் சாதி அடையாளங்களுடன் அழைக்கப்பட்டார்கள் என்பதால், அந்த அடையாளங்களை அழித்து புதிய தலைமுறையினருக்கு அவர்களை அடையாளப்படுத்த முடியாமல் விட்டுவிடக்கூடாது. அவர்கள் எந்த அடையாளத்தோடு அறியப்பட்டார்களோ, அந்த அடையாளத்தை இன்று கொண்டு வருவதால் நாம் சாதியை வளர்க்கிறோம் என்று ஆகாது. இனி அதை நாம் பயன்படுத்தக்கூடாது. எனவே, இதை நாம் அரசியலாக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.