'Thirumavalavan is trapped in a forest without direction' - Cellurraju's criticism Photograph: (admk)
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு பேசுகையில், ''திக்குத் தெரியாத காட்டுக்குள் சிக்கிக்கொண்டதைப் போல திருமாவளவன் சிக்கிக்கொண்டார். திமுகவின் கூட்டணி நெருக்கடிக்கு பயந்தாரா? அல்லது அவருடைய கட்சியிலேயே ஒரு குரூப் நீங்க திமுகவோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் நாங்கள் திமுகவோடு போய் விடுவோம் என்று சொன்னதால் பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை.
திருமாவளவனின் பேச்சுக்கள் முன்னுக்குப் பின் முரணாகத்தான் இருக்கும். ஜெயலலிதாவை பற்றிச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே அவருக்கு இல்லை. பிராமணர் ஆதிக்கம் செலுத்துவதாக எம்ஜிஆரை சுட்டிக்காட்டி உள்ளார். ஜெயலலிதா தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து இந்தநாட்டில் சட்டமாக்கி அதை நடைமுறைப்படுத்தி ஒன்பதாவது அட்டவணையில் கொண்டு வந்தவர். இதற்காகவே தந்தை பெரியாரின் வாரிசாகப் போற்றப்படுகின்ற ஆசிரியர் வீரமணி ஜெயலலிதாவுக்கு 'சமூக நீதிகாத்த வீராங்கனை' எனப் பட்டம் கொடுத்துள்ளார்.
இதே திருமாவளவன் ஜெயலலிதாவை வானளாவ புகழ்ந்து இருக்கிறார். அவருடைய ஆளுமை திறமை, அவருடைய பண்பு, அவருடைய ஈகோ இல்லாமல் பழகும் விதம், தோழமைக் கட்சிக்கு கொடுக்கப்படும் மரியாதை இதைப்பற்றியெல்லாம் புலங்காயிதம் பட்டிருக்கும் திருமாவளவன், திடீரென்று இப்படி ஜெயலலிதாவை குறை சொல்வது, எம்ஜிஆரை பற்றி திருமாவளவன் இதுவரை புகழ்ந்துதான் பேசியிருக்கிறார். இப்பொழுது தான் இப்படிப் பேசி இருக்கிறார். இது எதனால் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை திருமாவளவனுக்கு ஏதேனும் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை'' என்றார்.