அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிக்கும் அவர்கள் அழைக்கின்ற பட்சத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உறுதியாக சுற்றுப்பயணம் செல்வேன்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பெற்று வருவதால் திமுகவும் மு.க.ஸ்டாலினும் அவருடைய மகனும் மிகவும் அச்சப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அமைதிப்  புறாக்களாக இருக்கிறார்களா? அங்கேயும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாம் ஒரு ஆறு மாதத்தில் சரி நிலைக்கு வந்து விடும். எந்தெந்த கூட்டணி எந்தெந்த கட்சியில் இருக்கிறது என முடிவு பெற்று உறுதியாக திமுகவை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்படும். திருமாவளவன் எந்த அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசுகிறார் என தெரியாது. திருமாவளவன்  நீண்ட நாட்களாக அரசியலில் உள்ளவர். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர் அவர் முதல்வராக ஆவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. எதிர்க்கட்சியில் இருப்பதால் அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. திருமாவளவனுக்கு முதல்வராகக் கூடிய எல்லா தகுதிகளும் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்'' என்றார்.