தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் லட்சன்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் ‘வரலாறு திரும்புகிறது’ என்ற வாசகத்துடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் விஜய்யின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இதையொட்டி மேடையில் பேசிய தவெக தலைவர், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தற்போது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறி வருகிறது. இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்தும், பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (23-08-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கவர்ச்சி இருப்பதால் தான் திரைப்படைத் துறையை சார்ந்தவர்கள் நம்பிக்கையோடு அரசியலில் களம் இறங்குகிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் அரசியல்வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40,50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்ற கூடியவர்களின் போக்குகளை துணிந்து விமர்சிக்கக்கூடிய அளவுக்கு அரசியல் ஈடுபாடும், அரசியல் விழிப்புணர்வு தமிழகத்தில் கூடுதலாக இருக்கிறது, வளர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே, வெறும் திரை மாயை ஆட்சியை பிடிக்க போதாது. தமிழ்நாட்டு மக்கள் அப்படி ஏமாற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.  

மாநாட்டில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது திரைப்படத்தில் புகழ் பெற்ற செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களுக்கு இயல்பான ஒன்று தான். ஆந்திராவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் அதைப்போல் தமிழகத்திலே பல தலைவர்கள் இன்றைக்கு நாம் விஜயகாந்த் உட்பட விஜய் வரையிலும் பார்க்கிறோம். ஆனால், அவர்களால் கடைசி வரையில் தாக்கு பிடித்து நிற்க முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது. ரசிக பட்டாளம் என்பது வேறு, அரசியல் விழிப்புணர்வுடைய விழிப்புணர்வு களப்பணியாளர்கள் என்பது வேறு. சில லட்சம் பேர் போதாது ஆட்சியை கைப்பற்றுவதற்கு.. 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் பேர் வரை ஒரு இடத்திலே திரண்டால் உங்களுக்கு பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்கு பயன்படாது. அதை வைத்து நாம் ஆட்சி மாற்றமே நிகழ்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி இருக்கிறார்கள். ஒன்றாவது மாநாடு, இரண்டாவது மாநாடு என்றுதான் அதற்கு பெயர் சூட்ட முடிந்ததே தவிர கருத்தியல் சார்ந்து அந்த மாநாட்டுக்கு பெயர் சூட்ட முடியவில்லை. அதில் கருத்தியல் இல்லை. 

நாங்கள் வெல்லும் ஜனநாயகம் மாநாடு என்று நடத்தினோம், அதில் ஒரு கருத்தியல் இருந்தது. தேசம் காப்போம் மாநாடு, மது ஒழிப்பு மாநாடு ஆகியவைகளில் ஒரு கருத்தியல் இருக்கிறது. அந்த மாதிரி மாநாட்டுக்கு ஒன்றாவது மாநாடு, இரண்டாவது மாநாடு, மூன்றாவது மாநாடு போடுகிறார்கள் என்றாலே கருத்தியலாக அவர்களால் பொருத்தி பார்க்க முடியவில்லை. இந்த மாநாட்டின் நோக்கம் என்ன?. வெறும் கூச்சல், வெற்று சவடால்கள் விஜய் மாநாடு என்றுதான் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதில் அதிகபட்சமாக ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற ஒரு வேட்கை தெரிகிறது. அதனால் திமுகவை வீழ்த்துவோம் என்கிற வெறுப்பு வெளிப்படுகிறது. மற்றபடி அதில், அரைத்த மாவையே அரைத்த, புளித்த மாவே அரைக்கிற ஒரு மாநாடாகத்தான் அது முடிந்தது. போன மாநாட்டில் சொன்னது சரி தான்.  இந்த மாநாட்டில் ஒரு வளர்ச்சி இருக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்று பேச வேண்டும். இன்றைக்கு பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் பிரச்சனையான  தீவிர திருத்தம் குறித்து அவர் பேசவில்லை.

Advertisment

அடுத்து 30 நாட்கள் சிறையில் இருந்தாலே மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்படும் என்ற சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த சட்டத்தின் தொடர்பாக அவரின் நிலைபாடு என்ன? அதைப் பற்றி அவர் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களின் பிரச்சினை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. அதை பற்றி எந்த கருத்தும் இல்லை. தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஆணவ கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதை பற்றி அவர்களின் நிலைப்பாடு என்ன? தெரியவில்லை. பெரியார் என்ன சொன்னார்? அதை சார்ந்த எந்த பேச்சும் இல்லை. அம்பேத்கர் எதற்காக பாடுபட்டார்? அதைச் சார்ந்த எந்த கருத்தும் இல்லை. வெறும் திமுக வெறுப்பு, ஆட்சி அதிகாரம் என்கிற நிலையில் தான் ஒரு  மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. எனவே அவர்கள் கருத்தியலாக இன்னும் வரவில்லை.

எம்ஜிஆர் காலத்தில் இருந்த மாதிரி மக்கள் இப்போது இல்லை. இன்றைக்கு இருக்கிறவர்கள் ஒவ்வொருத்தரும் ஹீரோ, ஒவ்வொருத்தரும் பத்திரிகையாளர். இன்றைக்கு மீடியா சொல்வதை நம்பி இருக்கற மக்களா இல்லை. ஒவ்வொருத்தரும் மீடியா பர்சனா மாறிவிட்டார்கள். ஒரு காலத்தில் வெறும் ஹீரோவ திரையில் இருந்து பார்த்தான் அதனால அவனுக்கு ஒரு மயக்கம் இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருத்தரும் தானே ஹீரோங்கிற லெவலுக்கு மேல வந்திருக்கிறான் அதனால அந்த 1977 காலம் வேற 2026 காலம் வேற” என்று கூறினார்.