தனது முதல் சுற்றுப்பயணத்திற்காக இன்று (13/09/2025) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேருந்து மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவரது வாகனத்தை தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இதனால் பேருந்து ஊர்ந்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை விஜய்யின் ரசிகர்கள் பின்பற்றாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். போலீசார் சொல்லியும் கேட்காத நிலை அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  விஜய்யின் சுற்றுப்பயணம் காரணமாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''இன்று பரப்புரையை தொடங்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். கணிசமான வாக்குகளை பெறும் விஜய்யால் திமுகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக்கப் போகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் அணியாக தேர்தல் களத்தை சந்திக்க வாய்ப்பில்லை. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகள் அணி மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.