Advertisment

“ஏற்க இயலவில்லை, நெஞ்சு கணக்கிறது...” - உருக்கமாகப் பேசிய திருமாவளவன்!

nallathiruma

Thirumavalavan condoles the passing of Comrade Nallakannu

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்திய போராட்ட வீரர், தகைசால் தமிழர் ஐயா நல்லகண்ணுவின் மறைவு, பாட்டாளி வர்க்கத்துக்கு நேர்ந்த பேரிழப்பாகும். நூறாண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றாலும் கூட, அவரை மறைவை நம்மால் ஏற்க இயலவில்லை, நெஞ்சு கணக்கிறது. பொதுவாழ்க்கையில் நேர்மை, தூய்மை ஆகியவற்றுக்கான ஒரு அடையாளமாக சமகாலத்தில் வாழ்ந்து காட்டியவர் தோழர் நல்லகண்ணு. ஏறத்தாழ 30 ஆண்டு காலம் அவரோடு நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு, களத்தில் கைகோர்த்து நிற்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இவரைப்போல் இத்தகைய ஒரு பேராளுமை இனி எக்காலத்தில் வாய்க்கும் என்று ஏங்கத்தக்க வகையில் நம்மை விட்டு அவர் பிரிந்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் மீது பேரன்பை பொழிந்தவர். தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த வாஞ்சை கொண்டிருந்தவர், ஊக்கப்படுத்தியவர். அவர் இளைய தலைமுறையினருக்கு ஒரு மகத்தான சான்றாக வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர். அவரால் இன்று அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை காலத்தாலும் இட்டு நிரப்பு இயலாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும், செவ்வணக்கம் செலுத்தி வழி அனுப்புவோம் என்று அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. தமிழக அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் என்ற விருதினை வழங்கி சிறப்பித்தார். அதை போல் இந்திய ஒன்றிய அரசு, அவருடைய ஈகத்தை போற்றும் வகையிலும் விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையிலும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று உருக்கமாகப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை 5 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடல், அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

R. Nallakannu nallakannu Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe