பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (02-11-25) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக, விசிக, தவாக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நாதக, தவெக, பா.ம.க (ராமதாஸ்), அமமுக ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Advertisment

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அதில் பேசியதாவது, “இது வாக்குரிமையை குறி வைத்து நிகழ்த்தப்படுகிற ஒரு தாக்குதல் அல்ல. குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படுகிற ஒரு தாக்குதல். இந்த அரசியல் புரிதல் நமக்கு தேவை. குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை தான் கேட்கிறார்கள். ஆதார் அட்டை வேண்டாம் என்று அவர்கள் சொல்லுகிற காரணம், இது குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கானது அல்ல என்பது தான். 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அதை பொருத்தி பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

1987க்கு முன்பு பிறந்திருந்தால் பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட ஆதாரங்களை காட்ட வேண்டும். 87லிருந்து 2004க்குள் இந்தியாவில் பிறந்திருந்தால் அதற்குரிய பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் நிரூபிக்கும் ஆவணத்தை அளிக்க வேண்டும். குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடு தான் என்பது இதன் மூலம் தெரிகிறது. இவர்கள் அதை மறைமுகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள். இது தான் அவர்களுடைய நோக்கம். இந்த தேர்தலின் வெற்றியோ அல்லது இந்த வாக்குரிமையை பறிப்பது என்பதோ அவர்களுடைய நோக்கம் அல்ல. அவர்களின் இறுதி இலக்கை அறிவிப்பதற்கு குடியுரிமை திருத்தம் தேவைப்படுகிறது.

Advertisment

இந்த அரசியல் புரிதலோடு தான் இதை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். அதாவது தேர்தல் ஆணையம் இந்த வேலையை செய்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதற்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தான் இருக்கிறது. அதன் மூலம் தான் வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும். இதை நாம் எதிர்கொள்வதற்கு அரசியல் ரீதியாகவும், துணிச்சலாகவும் நாம் சில முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, இந்த வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்கு வழிகாட்டுதல் இல்லை என்பது ஒருபுறமாக இருந்தாலும், தேர்தல் நடக்கும் ஒரு ஆண்டு காலத்தில் இதை செய்யக் கூடாது என்கிற சட்டம் இருக்கிறது. தேர்தல் நடப்பதற்கு ஒரு ஆண்டு முன்போ அல்லது 1 ஆண்டு பின்போ நடக்க வேண்டும். எனவே, இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று கூறினார்.