Thirumavalavan Advice Vijay, you should be very careful with the BJP
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இன்று (26.11.2025) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தின் 76ஆம் ஆண்டு தினத்தை கொண்டாடும் விதமாக, நாட்டில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உறுதிமொழி ஏற்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவதற்கு அல்லது நீர்த்து போகச் செய்வதற்கு மதவாத சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஜனநாயக சக்திக்கும் உள்ளது. அதை உணர்த்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று உறுதிமொழி ஏற்கிறோம். எஸ்.ஐ ஆர் என்பது சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை என்பது குடியுரிமையை குறிவைத்து நகர்த்தப்படுகிற ஒன்று என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்கத்திலிருந்து சுட்டிக்காட்டி வருகிறது.
அண்மையில் குஜராத்தில் பேட்டி கொடுத்த அமித்ஷா, ஆமாம் இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு அல்ல, குடியுரிமை குறித்த சீராய்வுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தேசிய மக்கள் பெயரேட்டை உருவாக்குவது, அரசியலமைப்பு சட்டத்தையே கேலி கூத்தாக்கும் ஒரு முயற்சி . இந்திய தேர்தல் ஆணையத்தை தம் விருப்பம் போல் கையாளக்கூடிய அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்கிற ஒரு அரசாக இந்த அரசு விளங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே விசிகவை பொறுத்தவரையில், எஸ்ஐஆர் என்கிற இந்த நடவடிக்கையையே முற்றாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிகவழக்கு தொடுத்திருக்கிறோம். எனவே எஸ்.ஐ.ஆர், தேர்தல் ஆணையத்தின் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற , கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிக்கிற ஒரு முயற்சி என்பதை ஜனநாயக சக்திகள் உணர வேண்டும். இதனை எதிர்த்து போராட ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினர்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் ஆளுநர் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், “தமிழ்நாட்டை யார் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களை காயப்படுத்தும் வகையில் தமிழர்களின் தேசிய இன அடையாளங்களை சிதைக்கும் வகையில் , செயல்படுவது சங்க பரிவாரங்களின் ஒரு போக்காக இருந்து வருகிறது. அந்த பாசறையில் பயின்றவர் நம்முடைய ஆளுநர், என்பதால் அவருடைய நடவடிக்கைகளும் அவ்வாறே அமைந்திருக்கின்றன என்பது தான் உண்மை. எனவே தமிழகத்தை, இந்திய தேச எல்லையில் ஒருங்கிணைத்து தேசிய இனத்துக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை தவிர, ஆளுநர் சொல்லுவதைப் போல் யாரும் தமிழ்நாட்டை இந்திய தேசத்திலிருந்து அந்நியப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்தான் அத்தகைய முயற்சியில் ஈடுபடுவதாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது எந்த அளவுக்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. சேர்ந்த பிறகுதான் தெரியும். அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா, அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் அரசியல் , சூது, சூழ்ச்சி இருக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நண்பர் விஜய், மிகவும் பா.ஜ.கவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவருடைய கட்சியில், சங்கிகள் அல்லது சங்க பரிவார அமைப்புகளை சார்ந்தவர்கள் ஏற்கனவே ஊடுருவி இருக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் இருக்கின்றன. மேலும், மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் என்பது கேள்விக்குறியாக மாறும் என்பது என்னுடைய கருத்து” என்று பேசினார்.
Follow Us