'Thirukkural' - The Governor and the Palace are in controversy again Photograph: (governor)
கடந்த 13 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மருத்துவ தினத்தை ஒட்டி சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் 50 மருத்துவர்களை தேர்ந்தெடுத்து ஆளுநர் மாளிகை சார்பில் கவுரவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கியிருந்தார்.
வழங்கப்பட்ட அந்த கேடயத்தில் கீழ்ப் பகுதியில் 'செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு' என்று அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு கீழ் 'குறள் வரிசை எண் 944' என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த திருக்குறள் இப்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது. காரணம் அப்படி ஒரு குறளே திருக்குறளில் இல்லை என்பதுதான் அந்த அதிர்ச்சி.
இடம்பெற்ற குறள் போலியானது என தகவல்கள் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் 50 மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த விருதுகளை திரும்பப்பெற திட்டமிட்டிருப்பதாகவும், திருக்குறளை திருத்தம் செய்து மீண்டும் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லாத போலி திருக்குறளை ஆளுநர் மாளிகையில் உள்ளவர்கள் விருதுகளில் பொறிக்க எப்படி இசைவு தெரிவித்தனர் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆளுநருக்கு தமிழ் தெரியாத சூழல் இருக்கலாம். இருந்த போதிலும் ஆளுநர் மாளிகையில் பணியாற்றுபவர்களுக்கு தமிழ் தெரியாதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆளுநர் மாளிகையின் இந்த செயலும் தற்பொழுது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதற்கு பல்வேறு தமிழறிஞர்களும் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த விருதில் குறிப்பிட்டபடி பார்த்தால் 'அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து' என்பதே திருவள்ளுவர் எழுதிய 944வது குறளாகும். இது 'மருந்து' என்னும் அதிகாரத்தில் வருகிறது. இதன் பொருள் -'உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடில்லாத உணவை, நன்றாகப் பசித்த பிறகு உண்ண வேண்டும்' என்பதாகும். இதுவே மருத்துவத்துறைக்கு உரிய திருக்குறள் என்பதும் குறிப்பிடத்தக்கது.