தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தனிமையாகவும், குடும்பங்களுடனும் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

Advertisment

அதேசமயம், கோவை மாநகரில் நாளுக்கு நாள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தங்க நகைகள், பணம், இருசக்கர வாகனங்கள், ஹெல்மெட்கள், பெட்ரோல், வாகன உதிரி பாகங்கள், பழங்கள் அடுக்கிய கூடைகள், பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றைத் திருடர்கள் திருடிச் சென்ற நிலையில், தற்போது கேஸ் சிலிண்டர்களையும் அலேக்காக அபேஸ் செய்யும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

Advertisment

இந்த நிலையில் கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் 27 ஆம் தேதி காலை அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக இரண்டு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த இரு இளைஞர்கள் சுற்றி முற்றிப் பார்த்துள்ளனர். அப்போது அங்கும் இங்கும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்ததால், இருவரும் பைக்கில் சாதாரணமாக அமர்ந்து இருந்துள்ளனர். பின்னர் ஒருவர் பைக்கிலிருந்து கீழே இறங்கி அங்கும் இங்கும் பார்த்துள்ளார். அதற்கும் மற்றொரு நபர் பைக்கைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு தூக்குடா தூக்கு என்று கூற, உடனே அந்த நபர் அருகில் இருந்த இரு சிலிண்டர்களில் ஒன்றை அலேக்காகத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சட்டெனப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது. வீடியோவில் திருடர்களின் முகங்கள் தெளிவாகவும், அவர்களின் இருசக்கர வாகனத்தின் விவரங்களும் தெரிகின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ வைரலானதை அடுத்து, உக்கடம் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment