thief target bundles of potatoes and onions of the mysterious
பொதுவாக திருட்டு என்றாலே பணம், நகை, செல்போன், இருசக்கர வாகனம் போன்றவற்றையே திருடர்கள் திருடுவார்கள். காரணம், அந்தப் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்லவும், உடனடியாக பணமாக மாற்றவும் முடியும். ஆனால் சிவகாசியில் நடந்த இந்தச் சம்பவம், அந்த வழக்கமான கணக்கை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்படும் தள்ளுவண்டிக் கடைகளோ, காய்கறி அங்காடிகளில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்படும் பெரிய காய்கறி மூட்டைகளோ பொதுவாக திருடப்படுவதில்லை. ஏனென்றால், தூக்கிச் செல்ல உடல் வலிமை தேவை, மறைத்து விற்பதும் சுலபமில்லை.
சிவகாசி மாநகராட்சி அண்ணா தினசரி காய்கறி அங்காடியில் உருளைக்கிழங்கு மற்றும் பெல்லாரி வெங்காய மூட்டைகள் தொடர்ச்சியாக திருடு போன சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வரும் இந்தக் காய்கறி அங்காடியில், வியாபாரிகள் தங்கள் கடை முன்பு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சில நாட்களாக அடிக்கடி காணாமல் போனது. இதேபோல், திருவில்லிபுத்தூர் மங்காபுரத்தைச் சேர்ந்த சித்திரைக் கனி என்பவர் சிவகாசி காய்கறி அங்காடியில் கடை நடத்தி வரும் நிலையில், அவரது கடை முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டையை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக காய்கறி அங்காடி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், இரவு நேரத்தில் ஒரு நபர் உருளைக்கிழங்கு மூட்டையை தோளில் சுமந்தபடி, அங்கிருந்து அமைதியாக நடந்து செல்லும் காட்சியை கண்டறிந்தனர். அந்தப் பதிவுகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (40) என்பது தெரியவந்தது. மேலும், அவர் முன்பு இதே காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்ததும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்தக் கடையை இழந்த பின்னர், அங்காடியிலேயே கூலி வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான நஷ்டம் மற்றும் மன உளைச்சல் காரணமாக கேசவன், தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், மது வாங்குவதற்கான பணத்திற்காக அவ்வப்போது காய்கறி அங்காடியில் கிடத்தியிருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பெல்லாரி வெங்காய மூட்டைகளை திருடி வந்ததாகவும் வாக்குமூலம் அவர் தந்திருக்கிறார். பணமோ நகையோ அல்லாமல், மூட்டை மூட்டையான காய்கறிகளே திருட்டு இலக்காக மாறியிருப்பது விசித்திரமாகப் பார்க்கப்படுகிறது. சிசிடிவி கேமராவில் சிக்கியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கேசவன், சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பணம் அல்ல, நகை அல்ல, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய மூட்டைகளே ஒருவரை, சிறை வரை கொண்டு சென்ற இந்தச் சம்பவம், திருட்டின் பின்னால் மறைந்திருக்கும் வறுமை, மன உளைச்சல் மற்றும் பழக்கவழக்கச் சிக்கல்களை வெளிச்சமிட்டுள்ளது.
Follow Us