புதுக்கோட்டை மாவட்டத்தில், நகை, பணம், பைக், பண்டம், பாத்திரம் தொடங்கி ஆடு, மாடு, கோழிகள் வரை திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் 60 கோழிகள் வரை காணாமல் போயிருக்கின்றன. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி செய்த ஒற்றைச் செயலால், மீண்டும் திருட வந்த திருடன் திகைத்து, திரும்பிச் சென்றுள்ளான்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவருக்கு அருகில் உள்ள நகரம் கிராமத்தில், ஆழ்குழாய் கிணறுடன் விவசாய நிலம் ஒன்று உள்ளது. தொடர்ச்சியாக அங்கே விவசாயப் பணிகள் நடைபெறுவதால், அதிக நேரம் அங்கேயே இருந்து வருகிறார். அதனால், தோட்டத்தில் ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறார். பகலில் வேலைகள் நடைபெறுவதால், ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, தோட்டத்திற்கோ, ஆடு, கோழிகளுக்கோ தனியாக பாதுகாப்பு தேவைப்படவில்லை. ஆனால், இரவு நேரங்களில் தோட்டத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வேலை முடிந்து, துரைப்பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள்.

Advertisment

இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், தினந்தோறும் தோட்டத்தில் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளனர். கடந்த சில மாதங்களில், இந்தத் தோட்டத்தில் மட்டும் 60 கோழிகள் வரை காணாமல் போயிருக்கின்றன. தொடக்கத்தில், கோழிகளைப் பூனைகள் பிடித்திருக்கும் என்று விவசாயி துரைப்பாண்டியன் அசால்டாக இருந்துள்ளார். ஆனால், குஞ்சுகளுடன் இருக்கும் தாய்க் கோழிகள் காணாமல் போக, அதன் குஞ்சுகள் அப்படியே இருந்திருக்கின்றன. இது துரைப்பாண்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியே தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களால், ஒரு கட்டத்தில் தோட்டத்தில் பெரிய கோழிகளே இல்லாமல் போயிருக்கின்றன.

அதன்பிறகு, தோட்டத்தில் இருந்த மோட்டார் அறையில் உள்ள பொருட்கள் திருடப்பட ஆரம்பித்துள்ளன. அதேபோல, பக்கத்து தோட்டங்களில் இருந்து செல்போன், பணம் போன்றவைகளும் காணாமல் போயிருக்கின்றன. இந்த நிலையில், தோட்டத்தில் காணாமல் போன கோழிகளை விலங்குகள் பிடிக்கின்றனவா? அல்லது வேறு யாராவது திருடிச் செல்கிறார்களா? என்று கண்டறிய, சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.

Advertisment

இந்தச் சூழலில், கடந்த 24-ஆம் தேதி இரவு, தோட்டத்தில் உள்ள கேமராவின் இயக்கத்தை தனது செல்போனில் பார்த்துக்கொண்டிருந்த துரைப்பாண்டியன் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது தோட்டத்திற்கு பைக்கில் வரும் ஒரு இளைஞன், பையை மோட்டார் அறை அருகே வைத்துவிட்டு, கோழிகள் கவிழ்த்திருந்த கூடையைத் திறக்க முயல்கிறான். அப்போது, அவரது முகத்திற்கு நேராக கேமரா ஒன்று தன்னைக் கண்காணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், கோழிகளைத் திருடாமலேயே அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டான்.

அதையடுத்து, 60 கோழிகளைத் திருடியது இந்த இளைஞன்தான் என்ற முடிவுக்கு வந்த துரைப்பாண்டியன், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, திருடனைத் தேடி வருகிறார்.