விலை உயர்ந்த பொருட்களைத் திருடுவதற்காக கோயிலுக்கு புகுந்த திருடன் ஒருவர், கோயில் வளாகத்திலேயே அசந்து தூங்கியதால் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பம் நகரில் உள்ள சந்தைப் பகுதியில் காளி கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், வழக்கம் போல் நேற்று கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, சாமி சிலைக்கு அருகிலேயே சாமியின் கிரீடம், வெள்ளி மற்றும் தங்க நகைகளை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அர்ச்சகர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக இது குறித்து ஊர் பொது மக்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்தனர். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் வீர் நாயக் என்பது தெரியவந்தது. திருடனான வீர் நாயக், சம்பவம் நடந்த தினத்தன்று கோயில் பின்புற கதவின் பூட்டை திருடும் நோக்கத்தில் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர், சாமி சிலையில் இருந்த கீரிடம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஆகியவற்றை திருடியுள்ளார். திருடிய நகைகளோடு தப்பிப்பதற்கு பதிலாக, கோயில் வளாகத்திலேயே அசந்து தூங்கியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/16/theft-2025-07-16-11-08-07.jpg)