கடலூர் மாவட்டம், சிதம்பரம் கனகசபை நகர் முதலாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி விஜயலட்சுமி (83). இவர் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, “அருகாமையில் வீடு வாங்கியுள்ளேன். எனவே என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்” எனக் கூறி, தனது கவரிங் செயினை அவரது கழுத்தில் அணிவித்து ஆசீர்வாதம் பெறுவது போல் நடித்து, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மாற்றி பறித்துக்கொண்டு தலைமறைவானார்.

Advertisment

5

இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மேற்பார்வையில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் (சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாபு, கோபி உள்ளிட்டோர்) விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூதாட்டியிடம் செயினைப் பறித்தது தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு தாலுகா, நெய்வாசலைச் சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் கண்ணன் (48) எனத் தெரியவந்தது.

Advertisment

மேலும், விக்னேஷ் கண்ணன் மீது கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள கிளியனூர் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிதம்பரம் நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரம் மூதாட்டி செயின் பறிப்பு வழக்கில் விசாரணை நடத்த உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்முருகன் ஆகியோர் அவரை போலீஸ் காவலில் எடுத்து, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில் 6 பவுன் தங்கச் சங்கிலியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.