தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (04.03.2026) நடைபெற்றது. இதற்காகத் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த திடலில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 900 கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் காலை 11.30 மணியளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றத் தொடங்கினார். இந்நிகழ்வின் போது விஜய் பச்சைத் துண்டு அணிந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த முறை வேலூரில் பேசும் போது நான் சொல்லியிருந்தேன் விஜய் தான் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் விஜய் என்று கூறியிருந்தேன். ஏன் அதனைக் கூறினேன் என்றால் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதியாக, உண்மையான ஒரு பிரதிநிதியாக த.வெ.க. மட்டும் தான் இருக்கிறது என்பதற்காகத் தான் நான் அதனைக் கூறுகிறேன்.
மேலும் தமிழ்நாடு வெர்ஸ்சஸ் (vs) ஸ்டாலின் சார் அதாவது விஜய் வெர்ஸ்சஸ் ஸ்டாலின் சார் என்று கூறியிருந்தேன். இது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஆகும். இதனையும் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தலாகச் சொல்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிருந்தேன். உடனே விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார்கள் எனப் பேசுகிறார்கள். சிறுபான்மையின சகோதரர்களைப் பயமுறுத்திப் பயமுறுத்தி ஏமாற்று வேலையை மேற்கொள்வார்கள் அல்லவா?. அதனை அவர்கள் தொடர்ந்து செய்ய முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. நான் என்ன பேசினாலும் அதனைத் திரித்துப் பேசுவது. தில்லுமுல்லு வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்” எனப் பேசினார்.
Follow Us